மைதானத்தில் ஏற்பட்ட தகராறு வாலிபரை வெட்டிய 5 பேர் கைது

எண்ணுார், எண்ணுார், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் யுவராஜ், 19. இவர், 27ம் தேதி பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது, இளைஞர்கள் சிலர், கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். திடீரென பந்து, யுவராஜ் மீது பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த யுவராஜ் வாலிபர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்பகுதிவாசிகள், அவர்களை விலக்கி விட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, திருவொற்றியூர் செல்வதற்காக, நேதாஜி நகர் பேருந்து நிறுத்தத்தில், யுவராஜ் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வாலிபர்கள், யுவராஜிடம் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி தப்பியோடினர்.

அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரித்த எண்ணுார் போலீசார், சிவா, 18, அழகுவேல், 19, சுனில், 19, மனோஜ், 19, சரத், 18, ஆகிய ஐந்து பேரையும், நேற்று காலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement