தமிழக அணி 3 தங்கம் * இந்தியன் ஓபனில் அபாரம்

சண்டிகர்: இந்தியன் 'ரிலே' ஓபனில் அசத்திய தமிழக அணிகள் 3 பதங்கம் கைப்பற்றியது.
இந்தியன் 'ரிலே' ஓபன் போட்டி சண்டிகரில் நடந்தது. கலப்பு அணிகளுக்கான 4x100 மீ., 'ரிலே' ஓட்டம் நடந்தது. தமிழகத்தின் ஏஞ்சல் சில்வியா, வைஷாலி, தமிழரசு, கிட்சன் இடம் பெற்ற அணி, 43.44 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றியது. ஒடிசா (43.61), பஞ்சாப் (44.36) அடுத்த இரு இடம் பிடித்தன.
20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 4x400 மீ., ரிலே ஓட்டத்தில் தமிழகத்தின் புனியா, மாரி, ஹர்ஷிதா உள்ளிட்டோர் அடங்கிய அணி (3 நிமிடம், 47.93 வினாடி) தங்கம் கைப்பற்றியது.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4x400 மீ., ரிலே ஓட்டத்தில் விக்னேஷ், ஜெரோம் சஞ்சய், நகுல் பிரபு, ஷரண் இடம் பெற்ற தமிழக அணி (3 நிமிடம், 12.13 வினாடி) தங்கம் வென்றது.
பெண்களுக்கான 4x100 மீ., 'ரிலே' ஓட்டத்தில் தமிழகத்தின் நித்யா, ஏஞ்சல் சில்வியா, கிரிதராணி, கிருத்திகா இடம் பெற்ற அணி, 46.07 வினாடி நேரத்தில் ஓடி இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் வென்றது.
20 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் 4x100 மீ., 'ரிலே' ஓட்டம் நடந்தது. தமிழகத்தின் சந்தோஷ், வருண் மனோகர், யாகவராஜ், தருண் இடம் பெற்ற அணி இரண்டாவது இடம் (41.63) பிடித்தது.
20 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் 4x100 மீ., 'ரிலே' ஓட்டத்தில் சுபா தர்ஷினி, வெள்ளையம்மா, வர்ஷா உள்ளிட்டோர் இடம் தமிழக அணி, வெண்கலப் பதக்கம் (55.15) கைப்பற்றியது.
கலப்பு 4x400 மீ., ரிலே ஓட்டத்தில் தமிழகத்தின் ராகுல் குமார், தேஷிகா, சுராஜ், வித்யா இடம் பெற்ற அணி (3 நிமிடம், 24.46 வினாடி) வெள்ளிப் பதக்கம் வென்றது.
பெண்களுக்கான 4x400 மீ., ரிலே ஓட்டத்தில் தேஷிகா, மரியா, அக்சயா, வித்யா இடம் பிடித்த தமிழக அணிக்கு (3 நிமிடம், 40.85 வினாடி) வெள்ளி கிடைத்தது.
11 பதக்கம்
தமிழக அணி நேற்று 3 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம் என 11 பதக்கம் வென்று பட்டியலில் முதலிடம் பிடித்தது.
தேசிய சாதனை
ஆண்களுக்கான 4x100 மீ., 'ரிலே' ஓட்டத்தில் ரிலையன்ஸ் அணியின் குரிந்தர்விர் சிங், அனிமேஷ், மணிகண்டா, அம்லன் கூட்டணி, 38.69 வினாடி நேரத்தில் வந்து புதிய தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றது. இதற்கு முன் டில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் (2010) இந்திய அணி 38.89 வினாடி நேரத்தில் ஓடியது.