இந்தியா-தாய்லாந்து மோதல் * நட்பு கால்பந்தில்...

புதுடில்லி: நட்பு கால்பந்து போட்டியில் இந்தியா, தாய்லாந்து அணிகள் மோத உள்ளன.
ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் 24 அணிகள் (6 பிரிவு) பங்கேற்கின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கலாம்.
உலகத் தரவரிசையில் 126 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. இந்திய அணி தனது அடுத்த போட்டியில் ஜூன் 10ல் ஹாங்காங்கை சந்திக்க உள்ளது.
இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி, தரவரிசையில் 99 வது இடத்திலுள்ள தாய்லாந்துடன் நட்பு போட்டியில் பங்கேற்க உள்ளது. தாய்லாந்தின் தம்மசாட் மைதானத்தில் ஜூன் 5ல் இப்போட்டி நடக்க உள்ளது.
இதற்காக வரும் மே 18ல் கோல்கட்டாவில் பயிற்சி முகாம் நடக்கிறது. பின் மே 29ல் இந்திய அணி, தாய்லாந்து செல்ல உள்ளது.
இரு அணிகளும் இதுவரை 26 முறை மோதின. இதில் இந்திய அணி 7ல் வென்றது. தாய்லாந்து 12ல் வெற்றி பெற்றது. 7 போட்டி 'டிரா' ஆகின.