மின்சார வாகனங்களுக்கு மஹாராஷ்டிராவில் சலுகைகள்! வரி ரத்து, சுங்க வரியில் விலக்கு, மானியம் அறிவிப்பு

மும்பை : மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், பல சலுகைகள், விலக்குகள், மானியங்களுடன் கூடிய புதிய மின்சார வாகன கொள்கையை மஹாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. மின்சார வாகனங்கள் பயன்பாட்டில், இரண்டாவது பெரிய மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. கடந்த 2024 - 25ம் நிதியாண்டில் மட்டும், ஒரு லட்சத்து 81 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மின்சார வாகனங்கள் உற்பத்தி, பயன்பாடு மற்றும் சார்ஜிங் மையங்கள் அமைப்பது தொடர்பான மின்சார வாகனக் கொள்கைக்கு, மஹாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய கொள்கை
''புதிய மின்சார வாகன கொள்கைக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துஉள்ளது. இதன்படி, பயணியர் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும். இதன் வாயிலாக மின்சார வாகனங்கள் தயாரிப்பு மற்றும் பயன்பாடு மாநிலத்தில் அதிகரிக்கும்,'' என, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியுள்ளார்.
புதிய கொள்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மின்சார வாகனங்கள் கொள்கையின்படி, இந்தத் துறைக்கான அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஒதுக்கீடு, 950 கோடி ரூபாயில் இருந்து, 1,995 கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மூன்று முக்கிய அதிவிரைவு சாலைகளில், அனைத்து மின்சார நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பஸ்களுக்கு சுங்கக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது.
தள்ளுபடி
இதைத் தவிர, மற்ற மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தில், 50 சதவீத விலக்கு அளிக்கப்படுகிறது. அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் பதிவு செய்யும்போது, மோட்டார் வாகன வரி முழுதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதுபோல, பதிவு சான்றிதழ் கட்டணம், புதுப்பித்தல் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது.
வரும், 2030ம் ஆண்டு வரை, இரண்டு, மூன்று, போக்குவரத்துக்கு அல்லாத நான்கு சக்கர மின்சார வாகனங்கள், போக்குவரத்து கழக பஸ்கள், தனியார் போக்குவரத்து பஸ்களுக்கு, அடிப்படை விலையில், 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
சரக்கு போக்குவரத்துக்கான மூன்று சக்கர வாகனங்கள், பயணியர் போக்குவரத்துக்கான நான்கு சக்கர வாகனங்கள், டிராக்டர்கள், விவசாய இயந்திரங்கள், சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு, 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
தேவைகள் அதிகரித்துள்ள நிலையில், நெடுஞ்சாலைகளில், ஒவ்வொரு 25 கி.மீ., துாரத்துக்கும் இடையே ஒரு மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.