10 நிமிடத்தில் சிம் கார்டு டெலிவரி சேவை நிறுத்தம்

புதுடில்லி, :'பிளிங்கிட்' எனப்படும், 10 நிமிடத்தில் மளிகை, காய்கறி வினியோகிக்கும், 'ஆன்லைன்' செயலியுடன் இணைந்து, 'ஏர்டெல்' நிறுவனம், 'சிம் கார்டு'களை வழங்கி வந்த நிலையில், தொலைத்தொடர்பு துறை விதியால் அந்த சேவை நேற்று நிறுத்தப்பட்டது.

'ஏர்டெல்' மற்றும் 'பிளிங்கிட்' நிறுவனங்கள் இணைந்து, 10 நிமிடங்களில் சிம் கார்டு டெலிவரி செய்யும் சேவையை அறிமுகப்படுத்தின.

இந்த சேவையின் கீழ், வாடிக்கையாளர்கள் பிளிங்கிட் செயலி வாயிலாக ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் சிம் கார்டுகளை வீட்டில் பெறலாம். இதற்கு 49 ரூபாய் கட்டணம்.

சிம் டெலிவரி ஆன பின், ஆதார் அடிப்படையிலான -கே.ஒய்.சி.,யை சுயமாக பூர்த்தி செய்ய வேண்டும். கே.ஒய்.சி., என்பது வாடிக்கையாளர் விபரங்கள் சரிபார்க்கும் ஒரு செயல்முறை. அதன்பின் சிம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை, 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என ஏர்டெல் கூறியிருந்தது.

தொலைத்தொடர்புத் துறையின் கே.ஒய்.சி., விதிமுறைகள் படி சிம் கார்டை வாடிக்கையாளரிடம் வழங்கும் முன்னரே கே.ஒய்.சி., விபரங்களை பெற வேண்டும்.

ஆனால், பிளிங்கிட் - ஏர்டெல் டெலிவரி சேவையில் அந்த விதி பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து அனைத்து சிம் கார்டு நிறுவனங்களுக்கும் தொலைத்தொடர்புத் துறை சமீபத்தில் மின்னஞ்சல் அனுப்பியது.

அதில், 'சுயமாக கே.ஒய்.சி., பூர்த்தி செய்வதில் நடைமுறையிலுள்ள விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என வலியுறுத்தியிருந்தது.

இதையடுத்து, பிளிங் கிட் மற்றும் ஏர்டெல் 10 நிமிட சிம் கார்டு டெலிவரி சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.

Advertisement