ஆசிய விளையாட்டில் கிரிக்கெட்

புதுடில்லி: ஜப்பான் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் போட்டி தக்கவைக்கப்பட்டது.
ஜப்பானில், 20வது ஆசிய விளையாட்டு (2026, செப். 19 - அக். 4) நடக்கவுள்ளது. மொத்தம் 45 நாடுகளை சேர்ந்த விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். இதில் இடம் பெறும் போட்டிகள் குறித்து, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (ஓ.சி.ஏ.,), போட்டியை நடத்தும் ஏ.ஐ.என்.ஏ.ஜி., குழுவினருக்கு இடையே கூட்டம் நகோயா நகரத்தில் நடந்தது. கிரிக்கெட், கலப்பு தற்காப்பு கலை போட்டிகளை மீண்டும் நடத்திட முடிவு செய்யப்பட்டது. கிரிக்கெட் போட்டியை மீண்டும் 'டி-20' ஆட்டமாக நடத்த முடிவானது.
இதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் போட்டி 4வது முறையாக (2010, 2014, 2023, 2026) நடக்கவுள்ளது. இதனையடுத்து கிரிக்கெட்டில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்க உள்ளன. அமெரிக்காவில், 2028ல் நடக்கவுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெற்றதால் ஆசிய விளையாட்டிலும் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது.