புதுப்பிக்கப்பட்ட பொது கழிப்பறை 3 மாதமாக பூட்டி கிடக்கும் அவலம்

செவிலிமேடு,:காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடு பள்ளிக்கூட பின்புற தெருவில், கிராம தேவதை நாகாத்தம்மன் கோவில் அருகில் எட்டு ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால், குழாய்கள், கழிப்பறை பீங்கான் மின்விளக்குகள் உடைந்த நிலையில் இருந்தது.

இதனால், கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கழிப்பறையில் சேதமடைந்த பகுதி சீரமைக்கப்பட்டு, கட்டடத்திற்கு வர்ணம் தீட்டப்பட்டது. இருப்பினும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் கழிப்பறை பூட்டியே உள்ளது.

எனவே, செவிலிமேடு பகுதிவாசிகள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி, புதுப்பிக்கப்பட்ட கழிப்பறை கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினரிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement