பள்ளி அருகே உள்ள கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பள்ளி அருகே உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் விக்கிர வாண்டி, வேம்பியில் ஆய்வு நடத்தினார்.

அப்போது, பள்ளி வளாகம் அருகே உள்ள பங்க் கடை மற்றும் மளிகை கடைகளுக்குள் சென்று, தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுவதில்லை என்ற வாசகத்துடன் பலகை அமைக்க வேண்டும், எக்காரணம் கொண்டும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்க கூடாது என எச்சரித்தார்.

அதைத்தொடர்ந்து, முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி எதிரே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுவதை முன்னிட்டு வாகனங்கள் செல்ல அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலையை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

தாசில்தார் யுவராஜ், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேந்தர், ஜெகதீஸ்வரன், நகாய் திட்ட இயக்குனர் வரதராஜன், நகாய் பொறியாளர் செல்வராஜ், டோல் பிளாசா திட்ட மேலாளர் சதீஷ்குமார், பி.ஆர்.ஓ., தண்டபாணி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement