பஹல்காம் தாக்குதல் விளைவு உலர்பழங்கள் விலை 'கிடுகிடு'

பெங்களூரு: காஷ்மீரில் இருந்து, பெங்களூருக்கு குங்குமப்பூ, பாதாம், முந்திரி, உலர்ந்த திராட்சை, வால்நட், குல்கந்து வருவது வழக்கம். காஷ்மீரின், பஹல்காமில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் பலியாகினர்

மார்ச் முதல் ஜூன் வரை, உலர் பழங்களின் சீசன். பஹல்காம், ஸ்ரீநகரின் விவசாயிகள், உலர்பழங்களை விளைவிக்கின்றனர். இவர்களின் வயல்கள், மலைகளின் நெடுஞ்சாலைகளில் உள்ளன. இப்பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்ததால், இப்பாதையில் வாகனங்கள் நடமாட்டத்துக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால், அங்கிருந்து உலர்பழங்கள், குங்குமப்பூ வருவது நின்றுள்ளது.

இதன் விளைவாக, பெங்களூரு, சிவாஜிநகரின், ரசல் மார்க்கெட் உட்பட மற்ற இடங்களிலும் உலர்பழங்கள், குங்குமப்பூ விலை அதிகரித்துள்ளது. ஸ்டார் ஹோட்டல்களுக்கு உலர்பழங்கள் தேவை அதிகம். கர்ப்பிணியர் குங்குமப்பூ பயன்படுத்துகின்றனர். இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், காஷ்மீரி பூண்டு பயன்படுத்துகின்றனர்.

தேவைக்கு ஏற்ற வரத்து இல்லாததால், விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 1 கிலோ குங்குமப்பூ விலை, 3 லட்சம் ரூபாயாக இருந்தது. இப்போது 4 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. குல்கன் ஹனி 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக, காஷ்மீரி பூண்டு விலை, கிலோவுக்கு 1,800 ரூபாயாக இருந்தது. தற்போது 2,500 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோன்று, மற்ற உலர் பழங்களின் விலை, 200 முதல் 300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

'இதே நிலை நீடித்தால், விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தற்போதைக்கு விலை குறையாது' என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement