மனதுக்கு அமைதி தந்து மக்களை மகிழ்விக்கும் ஹலசூரு ஏரி

பெங்களூரின் ஹலசூரு ஏரியை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. மக்களுக்கு பிடித்தமான சுற்றுலா தலங்களில் ஹலசூரு ஏரியும் ஒன்றாகும். அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது.

பெங்களூரு ஒரு காலத்தில், 'ஏரிகளின் நகரம்' என, பிரசித்தி பெற்றிருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல, நாகரிகம் அதிகரித்தது. அபார்ட்மென்ட் கலாசாரம் துவங்கியது. மக்கள் மற்றும் கால்நடைகளின் தாகத்தை தணித்த ஏரிகள் மூடப்பட்டன. இங்கு வானுயர்ந்த கட்டடங்கள், பங்களாக்கள், வர்த்தக கட்டடங்கள் கட்டப்பட்டன.

உயிரை தக்க வைத்துள்ள ஏரிகளில், ஹலசூரு ஏரியும் ஒன்றாகும். 123.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பெங்களூரின் மிகப்பெரிய ஏரிகளில், இதுவும் ஒன்றாகும். பொதுவாக வெளியூரில் இருந்து விருந்தினர்கள் யாரும் வந்தால், அமைதியான சூழ்நிலையில் பொழுது போக்க விரும்பினால், சட்டென நினைவுக்கு வருவது ஹலசூரு ஏரிதான்.

தண்ணீருக்கு பச்சை நிற பொட்டு வைத்தது போன்று, சுற்றிலும் அழகாக வளர்ந்துள்ள பசுமையான மரங்கள்.

அதில் அடைக்கலம் பெற்றுள்ள பறவைகளின் ரீங்காரம் சத்தமில்லாமல் பாயும் தண்ணீர் என, இயற்கையை காண இரண்டு கண்கள் போதாது. இதே காரணத்தால் பொது மக்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர். படகு சவாரி செய்து ஏரியை சுற்றி வருகின்றனர்.

தினமும் காலை, மாலையில் இளைஞர்கள், இளம் பெண்கள், சிறார்கள் என, நுாற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி செய்கின்றனர். சுற்றுப்புற கிராமத்தினர் தங்கள் தோட்டத்தில் விளைவித்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை வாரத்தில் இரண்டு நாட்கள், ஹலசூரு ஏரி பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

நடைபயிற்சிக்கு வரும் பொது மக்கள், வீட்டுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், கீரைகளை வாங்கி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஹலசூரு ஏரிப்பகுதிக்கு இந்த பெயர் எப்படி வந்தது என்பது, பலருக்கும் தெரியாது. விசாலமான ஏரிக்கு இப்பெயர் ஏற்பட, ஒரு மரமே காரணமாக இருந்ததாம். முன்னொரு காலத்தில் ஏரி அருகில் பிரமாண்டமான பலா மரம் ஒன்றிருந்தது. இப்பகுதியை சுற்றிலும் பலா மரங்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. இதே காரணத்தால் இப்பகுதி, ஹலசூர் (ஹலசு என்றால் கன்னடத்தில் பலாப்பழம்) என, பெயர் ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது கெம்பேகவுடா, 1537ம் ஆண்டில் ஹலசூரு ஏரியை உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது. அன்றைய மன்னர்களின் தொலைநோக்கு பார்வை, அவர்கள் ஏரிகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்தனர் என்பதற்கு, ஹலசூரு ஏரியே சிறந்த எடுத்துக்காட்டு.

ஏரி முகப்பில் சிறிய அம்மன் கோவில், வரலாற்று பிரசித்தி பெற்ற ஒடுக்கத்துார் முருகன் கோவில், ஹலசூரு ஏரியில் இருந்து கூப்பிடு துாரத்தில் சோமேஸ்வரர் உட்பட பல்வேறு கோவில்கள் அமைந்துள்ளன. ரோஜா தோட்டம் சுற்றுலா பயணியரை ஈர்க்கிறது. ஏரியின் நடுவில் குட்டி, குட்டி தீவுகள் உள்ளன.

எப்படி செல்வது?


பெங்களூரு, எம்.ஜி. சாலை அருகில் ஹலசூரு ஏரி அமைந்துள்ளது. நகரின் பல்வேறு இடங்களில் இருந்து, எம்.ஜி.சாலைக்கு பஸ் வசதி, ஆட்டோ, டாக்சி வசதி உள்ளது. ஏரி அருகிலேயே இறங்கலாம். கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து, 4 கி.மீ., பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மீ., யஷ்வந்த்பூரில் இருந்து 9 கி..மீ., கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, 35 கி.மீ., தொலைவில் ஹலசூருஏரி உள்ளது. தற்போது ஹலசூருக்கு மெட்ரோ ரயில் வசதியும் உள்ளது. நேரம்: காலை 6:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை. புதன் கிழமை அனுமதி இல்லை. ஏரியை பார்வையிட கட்டணம் ஏதும் கிடையாது. படகு சவாரிக்கு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது

- நமது நிருபர் -.

Advertisement