அரிய பறவைகளை கண்டு ரசிக்க ஹொஸ்கோட் ஏரி  

பெங்களூரில் உள்ள ஐ.டி., - பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் வார இறுதி நாட்களில் தங்களது வாகனங்களை எடுத்து கொண்டு எங்கேயாவது நீண்ட துார பயணம் செய்ய விரும்புவர். பெரும்பாலும் நந்திமலை மற்றும் மலையேற்ற பகுதிகளுக்கு செல்வதற்கு அதிக முன்னுரிமை அளிப்பர்.

பெங்களூரு ரூரல் மாவட்டத்தின் முக்கிய நகரமாக ஹொஸ்கோட் விளங்குகிறது. இங்கு, அதிகாலையிலேயே பிரியாணி தயார் செய்யப்படுகிறது. பிரியாணியை ருசித்து சாப்பிடவும், வார இறுதி நாட்களில் ஹொஸ்கோட்டில் கூட்டம் அலைமோதும்.

பெங்களூரில் இருந்து பைக், கார்களில் அங்கு செல்கின்றனர். ஹொஸ்கோட்டில் பிரியாணி மட்டும் தான் பேமஸ் என்று சொல்லவிட முடியாது. அங்கு உள்ள ஹொஸ்கோட் ஏரியும் சிறந்த பொழுதுபோக்கு தலமாக உள்ளது.

அந்த ஏரியில் நிறைய அரிய வகை பறவைகளை கண்டு ரசிக்கலாம். ஸ்பாட் பில்டு பெலிகன்கள், சாம்பல் நிற ஹெரான்கள் உள்ளிட்ட அரிய வகை பறவைகளை ஆண்டு முழுதும் கண்டு ரசிக்கலாம். மேலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை பல புலம்பெயர்ந்த அரிய வகை பறவைகளின் வசிப்பிடமாகவும் ஹொஸ்கோட் ஏரி உள்ளது.

ஏரிக்கு கிழக்கு, மேற்கு, வடக்கு, அணைக்கட்டு என்று நான்கு பக்கம் உள்ளது. கிழக்கு பக்கம் சென்றால் பறவைகளை மிக அருகில் கண்டு ரசிக்க முடியும். அப்பகுதியில் நல்ல வெளிச்சமும் இருக்கும். ஏரியின் கரையில் வாகனத்தில் செல்லலாம் அல்லது நடந்து கூட செல்ல முடியும்.

ஏரியின் மேற்கு பகுதியில் பிபிட்ஸ், காடைகள், பன்டிங்ஸ் ஆகிய பறவைகளை காணும் வாய்ப்பு அரிதாகவே கிடைக்கும். ஏரிக்கரையின் புல்வெளி பகுதியில் நின்று பறவைகளை மொபைல் அல்லது கேமராக்களில் அழகான கோணங்களில் கிளிக் செய்து மகிழலாம். காலையில் மூன்று மணி நேரத்திற்கு மேல், நேரத்தை போக்குவதற்கு ஏற்ற இடமாக ஏரி உள்ளது.

எப்படி செல்வது?


பெங்களூரில் இருந்து ஓல்டு மெட்ராஸ் சாலை வழியாக, சென்னைக்கு செல்லும் வழியில் ஹொஸ்கோட் உள்ளது. அங்குள்ள சுங்கச்சாவடியை கடந்து இடதுபுறம் திரும்பி சர்வீஸ் சாலை வழியாக சென்றால் ஏரியை அடையலாம். பெங்களூரு நகருக்குள் இருந்து ஹொஸ்கோட் 35 கி.மீ., துாரத்தில் உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து ஹொஸ்கோட்டிற்கு அடிக்கடி பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகிறது

- நமது நிருபர் -.

Advertisement