மனநிலை காட்டும் கருவி தயார்

நோயாளிகள், தங்களை கவனித்துக் கொள்பவர்களிடம், தங்கள் எண்ணங்களை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை. பல சமயம் மருத்துவர்களிடமும் தெரிவிப்பதில்லை. இந்த நிலையை மாற்ற, பென்சில்வேனியா மாநில பல்கலை விஞ்ஞானிகள், ஒரு சிறிய கருவியை உருவாக்கியுள்ளனர். முகத்தில் ஒட்டிக் கொள்ளும் ஸ்டிக்கர் போன்ற இந்தக் கருவி, பல்வேறு உடலியல் சமிக்ஞைகளை பெற்று, உணர்ச்சி நிலைகளை அளவிடும்.

சுண்டு விரல் அளவுள்ள இந்த ஸ்டிக்கர், தோலின் அசைவு, உடல் வெப்பநிலை, வியர்வை மற்றும் ரத்தத்தின் ஆக்சிஜன் போன்றவற்றை அளவிடும் பல வகை உணரிகளை கொண்டுள்ளது. கூடவே, ஒரு சிலிக்கன் சில்லு, புளூடூத் சில்லு மற்றும் 5 -வோல்ட் பேட்டரி ஆகியவையும் உள்ளன. மிக மெல்லிய இந்த ஸ்டிக்கரை, முகத்தில் ஒட்டினால், தோலின் மாற்றங்களை கண்காணித்து, இந்தத் தரவை வயர்லெஸ் முறையில் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு செயலிக்கு அனுப்பிவிடும்.

பின்னர், ஏ.ஐ., செயலி, நோயாளியின் தோல் மாற்றங்களை அலசி, மகிழ்ச்சி, பயம், வருத்தம், அல்லது கோபம் என்று அறிந்து தெரிவித்துவிடும். சோதனைகளின்போது, இந்த ஸ்டிக்கர் கருவி, ஆறு பொதுவான உணர்ச்சிகளை 96 சதவீத துல்லியத்துடன் அடையாளம் கண்டுள்ளது. படுத்த படுக்கையாக உள்ள நோயாளிகளை பராமரிக்க மட்டுமல்ல, உளவியல் மருத்துவர்களுக்கும் இந்தக் கருவி பயன்படும் என்கின்றனர் வல்லுநர்கள்.

Advertisement