கிருமிகளைக் கொல்லும் பூச்சு

மருத்துவமனையில், நோய், ஒரு நோயாளியிடமிருந்து மற்றவருக்குச் சுலபமாக பரவும். அதனால்தான் மிகுந்த கவனத்தோடு ஒவ்வொரு பொருளும் கையாளப்படுகிறது. இருந்தாலும் மருத்துவமனை சுவர், கட்டில், கதவு கைப்பிடி ஆகியவற்றில் தொற்றுநோய்க் கிருமிகள் வாழ்ந்துகொண்டே இருக்கும். அப்படி தங்காமல் இருப்பதற்காக, அவற்றின் மீது சிலவிதமான பூச்சுகள் பூசப்படுகின்றன.

இந்தப் பூச்சுகளில் பெரும்பாலும் தங்கம், வெள்ளி, தாமிரம் ஆகிய உலோகங்கள் கலந்திருக்கும். இந்த உலோகப் பூச்சுகளின் மீது கிருமிகள் அதிக நேரம் தங்காது என்றாலும் இவற்றைத் தயாரிக்க அதிக செலவு பிடிக்கும். எனவே குறைந்த செலவில் கிருமிகள் அழிக்கும் வழியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தார்கள்.

அந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்ஹம் பல்கலை ஒரு புதிய பூச்சைக் கண்டுபிடித்துள்ளது. இதில் குளோரெக்சிடைன் டைகுளுக்கோனேட் (சி.ஹெச்.எக்ஸ்) உள்ளிட்ட சில வேதிப்பொருட்கள் உள்ளன. இதை மருத்துவமனை சுவர், கதவு, கைப்பிடிகள் என எதிலும் பூச முடியும். இதைச் சோதித்துப் பார்த்ததில் நல்ல முடிவுகள் கிடைத்தன.

மருத்துவமனைகளில் பரவும் கிருமிகளான ஈகோலை முதலிய பாக்டீரியா உள்ள கலவையை இந்தப் பூச்சு மீது விஞ்ஞானிகள் தெளித்துப் பார்த்தார்கள். இந்தப்பூச்சிலிருந்து உற்பத்தியான ரியாக்டிவ் ஆக்சிஜன் மூலக்கூறுகள் கிருமிகளின் செல் சுவர்களை உடைத்து அவற்றை அழித்தன.

சாதாரணமான இரும்புப் பொருட்களில் ஈகோலை பாக்டீரியாவால் நான்கு வாரங்கள் வாழ முடியும். ஆனால் இந்தப் பூச்சு மீது 8 மணி நேரம் கூட அவற்றால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனவே கிருமிகளைக் கொல்கின்ற இந்தப் பூச்சுகள் விரைவில் எல்லா இடங்களிலும் குறிப்பாக மருத்துவமனைகளில் பயன்பாட்டுக்கு வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Advertisement