பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு; விசாரிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு

13

புதுடில்லி: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.


காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தால் நாடே கடும் கோபத்தில் இருக்கிறது. இந்த வழக்கை முன்னாள் நீதிபதிகள் தலைமையிலான குழு விசாரணை நடத்த கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனு இன்று (மே 01) நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த பொதுநல மனு தாக்கல் செய்த வழக்கறிஞர்களை சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கண்டித்தனர். தற்போதைய நிலையில் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி நீதிபதிகள் விசாரிக்க மறுத்துவிட்டனர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:


பொறுப்புடன் இருங்கள். நீங்கள் நாட்டிற்கு சில கடமைகளைச் செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதிகள் அல்லது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எப்போதிலிருந்து இதுபோன்ற பயங்கரவாத பிரச்னைகளை விசாரிக்க நிபுணராக மாறியுள்ளார்? தற்போதைய நிலையில் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்தனர்.


இது குறித்து நீதிபதி சூர்யா காந்த் கூறியதாவது: இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட கைகோர்த்திருக்கும் முக்கியமான நேரம் இது. வழக்கறிஞர் மனுவை வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்தார். பின்னர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Advertisement