வாக்காளர் பட்டியல் பிழை திருத்தும் பணியில் மும்முரம்! பிறப்பு, இறப்பு சான்று அடிப்படையில் புதுப்பிப்பு

புதுடில்லி : இந்திய பதிவாளர் ஜெனரலிடம் இருந்து, பிறப்பு, இறப்பு பதிவுகளை மின்னணு முறை வாயிலாக பெற்று, வாக்காளர் பட்டியலை விரைவாக புதுப்பிக்கவும், பிழைகள் இல்லாததாக மாற்றும் நடவடிக்கையிலும் தலைமை தேர்தல் கமிஷன் மும்முரமாக இறங்கியுள்ளது.


வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தினர் தேர்தல் கமிஷனில் இருந்து 7ம் எண் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். பல சந்தர்ப்பங்களில் இறப்பு தகவல் முறையாக தெரிவிக்கப்படாத காரணத்தால் வாக்காளர் பட்டியலில் பிழைகள் நேர்கின்றன.

துல்லியம்



'இதை சரி செய்ய, பிறப்பு, இறப்பு சான்றுகளின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும்' என, தலைமை தேர்தல் கமிஷன் கடந்த மாதம் தெரிவித்து இருந்தது. இந்த பணியை தற்போது துவக்கியுள்ளது. இதன்படி, இந்திய பதிவாளர் ஜெனரலிடம் இருந்து இறப்பு பதிவுகளை மின்னணு வாயிலாக பெற்று, அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் நடவடிக்கையில் தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது.


ஒருவர் உயிரிழந்த பின் இறுதிச்சடங்கை செய்ய இறப்பு சான்று கட்டாயம் என்பதால், இறப்பு பதிவுகள் துல்லியமாக பதிவாகின்றன. இந்த தரவுகளை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் பணியை தலைமை தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளதாக நேற்று அறிவித்துள்ளது.


பூத் அளவிலான அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்ளும் போது, இறப்பு தொடர்பான தகவலை உறுதி செய்து வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய எழுத்து



இதேபோல், 18 வயது நிரம்பிய வாக்காளர்களையும், பிறப்பு சான்றிதழ் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்காளர் தகவல் அடங்கிய சீட்டில், எழுத்துகள் மிகச் சிறியதாக இருப்பதாக பரவலாக குறை கூறப்பட்டு வந்தது.


இதை சரி செய்ய, அந்த சீட்டில் உள்ள வரிசை எண் மற்றும் பகுதி எண் ஆகியவை பெரிய எழுத்துகளில் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வாக்காளர்கள் தங்கள் ஓட்டுச்சாவடியை சரியாக அடையாளம் காணவும், தேர்தல் அதிகாரி வாக்காளரின் பெயரை பட்டியலில் எளிதாக அடையாளம் காணவும் இந்த மாற்றம் உதவும் என கூறப்பட்டுள்ளது.

அடையாள அட்டை



மேலும், வாக்காளர் பெயர் பதிவு மற்றும் சரிபார்ப்பு பணிகளை செய்யும் பூத் அளவிலான அதிகாரிகளுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கவும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


வீடு வீடாக வந்து வாக்காளர் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ளும் அதிகாரிகளை பொதுமக்கள் எளிதில் அடையாளம் காண இந்த நடவடிக்கை பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.


மேலும், பல மாதங்களாக எழுப்பப்பட்டு வரும் நகல் வாக்காளர் அடையாள அட்டை குற்றச்சாட்டு, மூன்று மாதங்களில் சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

Advertisement