உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்

சென்னை: 'நிலைமையின் தீவிரம் தெரியாமல், தவறான முடிவு எடுத்து என் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் நேரில் ஆஜராக முடியாது' என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் புகார் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், நாமக்கல், மதுரை மாவட்டங்களில் கலெக்டராகவும், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.
இது பற்றி சிறப்பு அரசு வக்கீலுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், 'பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் மதுரை கோர்ட்டில் ஆஜராக வர வாய்ப்பில்லை. எனக்கு மாநில அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டு விட்டது. என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
'பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது, தவறானது, முறையற்றது. கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளை கருத்தில் கொள்ளாமல், என் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. எனவே, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் கோர்ட்டில் ஆஜராக இயலாத நிலை இருப்பதை நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும்' என்று சகாயம் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டில் அவர், குவாரிகளில் நடந்த சட்ட விரோத செயல்பாடுகள் பற்றி விசாரிக்க நீதிமன்றத்தால் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். விசாரித்த அவர், 1990ம் ஆண்டு முதல் நடந்த குவாரி முறைகேட்டை வெளிக்கொண்டு வந்தார்.
அவர் தாக்கல் செய்த 600 பக்க அறிக்கையின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பது அம்பலம் ஆனது.
'பாதுகாப்பை விலக்கும் முடிவை எடுத்தவர்கள், எனக்கு இருக்கும் அச்சுறுத்தல் பற்றி புரிந்து கொள்ளவில்லை' என்று கூறியுள்ள சகாயம், சமீபத்தில் புதுக்கோட்டையில் நடந்த ஜெகபர் அலி கொலை, திருநெல்வேலியில் நடந்த ஜாகிர் உசேன் கொலை ஆகியவற்றை சுட்டிக் காட்டியுள்ளார்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.ஏஸ்., அதிகாரி சகாயம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:
நாட்டின் மிகப்பெரிய ஊழலை வெளிக்கொண்டு வந்துள்ளேன். அந்த ஊழலில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது பற்றி விரிவான அறிக்கை கொடுத்துள்ளேன். வரலாற்றுச்சின்னங்கள் கூட தகர்க்கப்பட்டுள்ளன.
அப்படிப்பட்ட எனக்கு பாதுகாப்பை விலக்கிக்கொண்டுள்ளனர்.
இது உண்மையிலேயே அபாயகரமான நிலை. இது பற்றி நான் சிறப்பு நீதிமன்றத்தின் அரசு வக்கீலுக்கு கடிதம் எழுதி உள்ளேன். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை சுட்டிக்காட்டி, பாதுகாப்பு விலக்கப்பட்ட நிலையில், எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என்று தெரிவித்துள்ளேன். அதனால் நீதிமன்ற நடவடிக்கையில் பங்கேற்க முடியாத நிலையில் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளேன்.
நான் என் நடவடிக்கை மேற்கொள்ளும்போது நான் அச்சப்படவில்லை. இது போன்ற விளைவுகள் எல்லாம் வரும் என்று எதிர்பார்த்து தான் சவால்களை சந்தித்தேன். ஊழல்களை வெளிக்கொண்டு வந்தேன்.
ஆனால், இதையெல்லாம் உணராத ஒரு அரசு, ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் பாதுகாப்பை பற்றிக்கூட கவலைப்படாத தமிழக அரசு, எப்படி சாதாரண குடிமகன் பாதுகாப்பை உறுதி செய்யும்? இது பற்றி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் விரிவான 10 பக்க கடிதத்தையும் எழுதி உள்ளேன்.
இவ்வாறு சகாயம் தெரிவித்துள்ளார்.









