திருக்கல்யாண விருந்து  பணிகளில்  பங்கேற்க  பக்தர்களுக்கு அழைப்பு

மதுரை: மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விருந்து பணிகளில் பக்தர்கள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர்.

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணத்திற்கு பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை சார்பில் 26 ஆண்டுகளாக விருந்து வழங்குகின்றனர். தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு சட்டப்படி கட்டணம் செலுத்தி அனுமதி பெற்று விருந்து நடக்கிறது.

இந்தாண்டு மே 7ல் மாப்பிள்ளை அழைப்பு விருந்து, மாலை 5:00 முதல் இரவு 10:00 மணி வரைக்கும், மே 8ல் திருக்கல்யாண விருந்து காலை 7:00 முதல் மாலை 4:00 மணி வரைக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.

விருந்தில் கற்கண்டு சாதம், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், வடை, வெஜிடபிள் பிரியாணி, சாம்பார், தக்காளி, தயிர் சாதம், அப்பளம் வழங்கப்பட உள்ளது.

காய்கறிகள் பரவை, மாட்டுத்தாவணி மார்க்கெட்களில் இருந்தும், அரிசியை டிரஸ்ட் உறுப்பினர்கள், பக்தர்களும் கொடுக்கின்றனர். கீழமாசி வீதி வியாபாரிகள், மளிகைப் பொருட்கள், எண்ணெய் கொடுக்கின்றனர்.

மளிகைப் பொருட்கள்கொடுக்க விரும்பும் பக்தர்கள் மே 4 முதல் 7 மாலை வரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் கொடுத்து ரசீது பெறலாம்.மே 7 மதியம் 2:00 மணி முதல் காய்கறிகள்வெட்டும் பணியில் பங்கேற்கலாம்.

தகவலுக்கு 95977 45062ல் அழைக்கலாம் என டிரஸ்ட் தலைவர் தண்டீஸ்வரன் தெரிவித்துஉள்ளார்.

Advertisement