சந்திரபாபு நாயுடுவின் திட்டங்களை பார்த்து கற்றுக் கொண்டேன்: பிரதமர் மோடி

13


அமராவதி: ''நான் குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டபோது, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு செயல்படுத்திய திட்டங்களை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன்,'' என்று அமராவதியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசினார்.


ஆந்திரா மாநிலம் அமராவதியில் நடந்த அரசு விழாவில், 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
அமராவதி என்பது, இந்திரலோகத்தின் தலைநகரத்துப் பெயர். அது, ஆந்திராவின் தலைநகராகவும் இருப்பது எத்தகைய பெருமைக்குரிய ஒற்றுமை!


இது, ஸ்வர்ணா ஆந்திரா (தங்க ஆந்திரா) உருவாகும் என்பதற்கான அறிகுறி. ஸ்வர்ணா ஆந்திரா, வளர்ந்த பாரதம் உருவாக்கும் நமது நோக்கத்தை வலுப்படுத்தும்.
நான் குஜராத் மாநிலத்தின் முதல்வராக தேர்வு செய்யப்போது, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு செயல்படுத்திய திட்டங்களை கூர்ந்து கவனிப்பேன். அவரது திட்டங்களில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இன்று அவற்றை அமல்படுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.


இந்தியாவை விண்வெளித்துறையில் வல்லரசு நாடாக்கியதில் ஆந்திராவுக்கு முக்கிய பங்கு உண்டு. ஏராளமான மாணவர்களை விண்வெளித்துறைக்கு இந்த மாநிலம் ஈர்க்கிறது.
நாட்டின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையை வலுப்படுத்தும் புதிய நிறுவனம் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் புதிய ஏவுகணை சோதனை தளத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நவதுர்கா சோதனை தளம், இந்தியாவின் பாதுகாப்பு சக்தியை வலுப்படுத்தும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அமராவதி நகரத்தை மறு உருவாக்கம் செய்வதற்கான திட்டப்பணிகளையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

Advertisement