பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்: காங்., தீர்மானம்

புதுடில்லி: '' பயங்கரவாதத்தை தொடர்ந்து ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதுடன் அந்நாட்டிற்கு பாடம் கற்பிக்க வேண்டும்,'' என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
டில்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல், முன்னாள் தலைவர் சோனியா, எம்.பி., பிரியங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு
பஹல்காம் தாக்குதல்
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயற்குழு உள்ளது. இந்த தாக்குதலுக்கு நீதி மற்றும் பதிலை வேண்டி ஒட்டு மொத்த நாடும் உள்ளது. மறக்க முடியாத அத்துமீறல் நடந்த இந்த நேரத்தில், அரசியல் செய்வதற்கு இது நேரம் இல்லை என்பதை காங்கிரஸ் நம்புகிறது. ஒற்றுமையுடன் இருப்பதற்கான நேரம் என கருதுகிறோம். அரசியல் பிரிவினையை தாண்டி, இந்தியா ஒற்றுமையுடன் உள்ளது. நாட்டை பிரிக்க முடியாது என்ற செய்தி அனுப்பப்பட வேண்டும். பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும் இதுவே சரியான நேரம். இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு பின்னணியில் இருந்தவர்கள் மூளையாக செயல்பட்டவர்கள், அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
நமது நாட்டிற்கு பயங்கரவாதத்தை தொடர்ந்து ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தவும், தண்டிக்கவும் உறுதியான, தெளிவான மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி மட்டும் போதாது. நீண்ட கால மறுவாழ்வு திட்டம், மனீரீதியிலான ஆதரவு மற்றும் இறந்தவரகளை தேசிய அங்கீகாரத்துடன் கவுரவப்படுத்த வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு
11 ஆண்டுகளாக தொடர்ந்துமறுத்து வந்த நிலையில், மோடி அரசு கடைசியாக காங்கிரசின் கோரிக்கையை ஏற்று, அடுத்து நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தும் என அறிவித்து உள்ளது. இந்த கோரிக்கை வைத்ததற்காக காங்கிரஸ் தலைமையை கடந்த 11 ஆண்டுகளாக மோடி விமர்சித்து வந்தார். அதேநேரத்தில், இதற்கான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியிருந்தார். எதிர்க்கட்சி தலைவர் ராகுலும் காங்கிரஸ் கூட்டங்கள், பார்லிமென்ட், பத்திரிகையாளர் சந்திப்பிலும் வலியுறுத்தி வருகிறார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என 2019 மற்றும் 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போதும் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. தனியார் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
ஜாதி வாரி கணக்கெடுப்பிற்கான தெலுங்கானா அரசு பின்பற்றிய திட்டத்தை மத்திய அரசு பின்பற்ற வேண்டும். அதிகாரிகள் நடத்தும் கணக்கெடுப்பாக இல்லாமல், மக்களின் கருத்துகளும் கேட்கப்பட்டது. இதேபோன்ற கொள்கையை தேசிய அளவிலும் மத்திய அரசு கொண்டு வர வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு உதவ காங்கிரஸ் தயாராக உள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பை இனியும் தாமதபடுத்தக்கூடாது. அனைத்து கட்சிகளின் நம்பிக்கையை பெற வேண்டும். இது குறித்து விவாதிக்க பார்லிமென்ட்டை உடனடியாக கூட்ட வேண்டும். கணக்கெடுப்புக்கு தேவையான நிதி, காலக்கெடு, மற்றும் திட்டங்களை மத்திய அரசு வழங்க வேண்டும். கணக்கெடுப்பின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக இருக்க வேண்டும். இதில் கிடைக்கும் தரவுகள் இட ஒதுக்கீடு, நலத்திட்டங்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகளின் கொள்கையை மறு ஆய்வு செய்யும் வகையில் அமைய வேண்டும். இவ்வாறு அந்த தீர்மானங்களில் கூறப்பட்டு உள்ளது.









மேலும்
-
பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக புகலிடம் அளிக்க இந்தோனேசியா தயார்!
-
எல்லையில் 9வது நாளாக பாக். அத்துமீறல்: இந்தியா பதிலடி
-
நேற்றைய தினம் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் இவர்கள் தான்!
-
கோவாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாப பலி; 50 பேர் காயம்
-
பணி நேரத்தில் விஜய்க்கு மாலை; மதுரை போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
-
பஹல்காம் சம்பவம் எதிரொலி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்தாக வாய்ப்பு