நேற்றைய தினம் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் இவர்கள் தான்!

31

சென்னை: லஞ்சம் வாங்கி வழக்கில் விராதனுார் பெண் வி.ஏ.ஓ., இந்திரா, உரப்புளி கிராம தலையாரி ராசையா உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

நேற்றைய லஞ்ச வழக்கு





பெண் வி.ஏ.ஓ.,வுக்கு 'காப்பு'
மதுரை மாவட்டம், சோழவந்தானை சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவரது கணவர் கணேசன், 2019ல் இறந்தார். இரு மகன்கள் உள்ளனர். விராதனுாரில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க முருகேஸ்வரி முடிவு செய்தார். அதற்காக, வாரிசு சான்றிதழ் பெற, ஏப்., 1ல் ஆன்லைனில் விண்ணப்பித்தார்.



விராதனுார் வி.ஏ.ஓ., இந்திரா, 46, விண்ணப்பத்தை காரணமின்றி நிராகரித்தார். நேரில் விசாரிக்க சென்ற முருகேஸ்வரியிடம், மீண்டும் விண்ணப்பிக்குமாறு கூறினார். ஏப்., 23ல் முருகேஸ்வரி விண்ணப்பித்துவிட்டு, மே 1ல் நேரில் சென்றபோது, இந்திரா, 18,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.


தர விரும்பாத முருகேஸ்வரி, நேற்று காலை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சத்தியசீலனிடம் புகார் செய்தார். அண்ணாநகர் - வண்டியூர் ரோடு சந்திப்பு அருகே முருகேஸ்வரியை வரவழைத்து, அவரிடம், 18,000 ரூபாயை வாங்கிய போது, இந்திராவை போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தலையாரி கைது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அலுவலகம் எதிரில் லஞ்சம் வாங்கிய தலையாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். முதுகுளத்துார் தாலுகா காக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்தார். 2 நாட்களுக்கு முன்பு உரப்புளி கிராம தலையாரி ராசையா 45, தனக்கும், வி.ஏ.ஓ.,விற்கும் ரூ.5000 லஞ்சம் வேண்டுமென கேட்டுள்ளார்.



லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து தலையாரிடம் வழங்க கூறி அனுப்பினர்.


பரமக்குடி தாலுகா அலுவலகம் எதிரில் தலையாரி ராசையாவிடம் பணத்தை கொடுத்தார். அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தலையாரியை கைது செய்தனர். மேலும் வி.ஏ.ஓ.,விற்கு இதில் தொடர்பு உள்ளதா என விசாரிக்கின்றனர்.
திருத்தணி வி.ஏ.ஓ., கைது

திருவள்ளூர் மாவட்டம், வீரகநல்லுார், சமத்துவபுரவாசிகள் 25 பேர், பட்டா இல்லாததால், கடனுதவி மற்றும் அரசு சார்பில் வீடுகள் பழுது பார்க்க முடியாமல் சிரமப்பட்டனர்.

இவர்கள், பட்டா வழங்கக்கோரி, திருத்தணி தாலுகா வீரகநல்லுார் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலரான கோட்டீஸ்வரி, 47, என்பவரை அணுகி உள்ளனர். அவர், அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.



சமத்துவபுரம் பகுதிவாசிகள் தரப்பில், வீரகநல்லுார் தி.மு.க., பிரமுகர் மதுசூதனன், 57, என்பவர், கோட்டீஸ்வரியிடம் பட்டா வழங்க கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு, ஒவ்வொரு பயனாளியும், தலா 3,000 ரூபாய் தந்தால், கணினி பட்டா நகல் தருவதாக கூறியுள்ளார். இது குறித்து, மதுசூதனன், திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கணேசனிடம் புகார் அளித்தார்.


நேற்று மதியம் டி.எஸ்.பி., கணேசன், இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார், வீரகநல்லுார் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மாறு வேடத்தில் வந்தனர். அவர்களின் கண்காணிப்பில், மதுசூதனன் ரசாயனம் பூசிய 75,000 ரூபாய் நோட்டுகளை கோட்டீஸ்வரியிடம் கொடுத்தார். அதை கோட்டீஸ்வரி வாங்கவும், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், கையும் களவுமாக அவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement