பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக புகலிடம் அளிக்க இந்தோனேசியா தயார்!

27

ஜகார்த்தா: போரில் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக புகலிடம் அளிக்க இந்தோனேசியா முன்வந்துள்ளது.


கடந்த 2023ல் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அந்நாட்டிற்குள் புகுந்து தொடர் தாக்குதல் நடத்தியதுடன், 200க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றது. பதிலுக்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் இந்த போரில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியானதாகவும், 1.15 லட்சம் பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில், போரில் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக புகலிடம் அளிக்க இந்தோனேசியா முன்வந்துள்ளது.


குறிப்பாக, கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இந்தோனேசியா அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தோனேசியாவில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கிரேட் இந்தோனேசியா இயக்க கட்சி பொதுச்செயலாளர் அஹ்மத் முஸானி கூறியதாவது: போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதற்கும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனேசியா, பாலஸ்தீன சுதந்திரத்தை தொடர்ந்து ஆதரித்து வருகிறது.



ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட, இந்தோனேசியாவில் தற்காலிகாக தங்கி கொண்டு பாதிப்பில் இருந்து மீள வேண்டும். அவர்கள் நாட்டில் நடக்கும் போர் முடிவுக்கு வந்த வந்த உடன் அவர்கள் வீடு திரும்புவார்கள், என்றார்.

விமானங்கள் தயார்



இந்தத் திட்டத்திற்கு இரண்டு பெரிய இஸ்லாமிய அமைப்புகளான நஹ்த்லதுல் உலமா மற்றும் முஹம்மதியா ஆதரவு அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து வர விமானங்களை அனுப்ப இந்தோனேசியா தயாராக உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் சுகியோனோ கூறினார்.


கடந்த மாதம் இந்தோனேசியா அதிபர் பிரபோவோ கபியாண்டோ ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, கத்தார் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று, நீண்டகால மோதலுக்கு தீர்வு காணுவது குறித்து ஆலோசித்தார். தற்போது அவர் பாலஸ்தீன சுதந்திரத்திற்கான இந்தோனேசியாவின் அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.

Advertisement