புதிய போப் தேர்வு: தயாராகும் வாடிகன்

5


வாடிகன் சிட்டி: புதிய போப்பை தேர்வு செய்வதற்கான பணிகளில் வாடிகன் தயாராகி வருகிறது. புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை உலகம் அறியும் புகைபோக்கியை பொருத்தப்பட்டு உள்ளது.


உலகம் முழுவதும் உள்ள, 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், 88, இத்தாலியின் வாடிகன் சிட்டியில் ஏப்.,21ல் காலமானார்.அவரது இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்ட உலக தலைவர்கள் அஞ்சலிசெலுத்திய பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.


Tamil News
போப் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து, அடுத்து புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை தொடங்கியது. புதிய போப்பை தேர்வு செய்யும் பணி வரும் 7 ம் தேதி நடக்க உள்ளது.


போப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள சிஸ்டைன் சேப்பலில் 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளனர். அவர்கள் ஒன்று கூடி ரகசியமாக நடத்தும் ஓட்டெடுப்பில், 89 கார்டினல்களின் ஆதரவை பெறுபவர், அடுத்த போப் ஆக தேர்வு செய்யப்படுவார்.


புகைபோக்கியிலிருந்து வெள்ளைப் புகை வெளியேறும்படி சிறப்பு ரசாயனங்களைப் பயன்படுத்தி காகித வாக்குச் சீட்டுகளை ஒரு அதிகாரி எரிக்கும் போது, ​​ஒரு போப் தேர்ந்தெடுக்கப்பட்டதை உலகம் அறியும். பின்னர் புதிய போப் தோன்றி சதுக்கத்தில் உள்ள கூட்டத்தினருக்கு தனது ஆசீர்வாதத்தை வழங்குவார். அன்றைய தினம் புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அந்த புகைபோக்கியில் இருந்து கரும்புகை வெளியேறும்.


இந்நிலையில், புதிய போப் தேர்வு செய்வதற்கான பணிகள் வாடிகனில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை அறிவிக்கும் புகைபோக்கியை தூய்மைப்படுத்தி தீயணைப்பு வீரர்கள் சிஸ்டைன் சேப்பலில் பொருத்தினர்.

Advertisement