செந்தில் பாலாஜிக்கு பதிலாக வரப்போகும் பொறுப்பு அமைச்சர் யார்; கோவை தி.மு.க.,வில் ஆர்வம்

கோவை: அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி துறந்ததால், கோவை மாவட்டத்துக்கு இனி பொறுப்பு அமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பில், அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க.,வினர் காத்திருக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒருவர் கூட இல்லாததால், கரூரைச் சேர்ந்த செந்தில் பாலாஜி, மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர், கட்சி பணிகளோடு மாவட்டத்தின் அரசு பணிகளையும் சேர்த்து கவனித்து வந்தார். இதனாலேயே, உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.., கூட்டணி அதிக வார்டுகளில் வெற்றி பெற்றது.
அத்துடன், கோவையில் இவரால் கட்சி வளர்ச்சி அடையும் என தலைமை நம்பியதோடு, அவர் கேட்டபடியெல்லாம் கோவைக்கு செய்து கொடுக்க, அனைத்து அமைச்சர்களுக்கும் வாய்மொழியாக உத்தரவிட்டிருந்தது.
அமலாக்கத் துறை வழக்கில் சிக்கி, செந்தில் பாலாஜி சிறைக்கு செல்ல நேரிட்டது. அந்த சமயத்தில், கோவை மாவட்டத்துக்கான அவருடைய பொறுப்பு, ஈரோடு மாவட்ட அமைச்சர் முத்துசாமியிடம் வழங்கப்பட்டது.
சிறையில் இருந்து வெளிவந்தும், மீண்டும் கோவை மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர் போலவே செந்தில் பாலாஜி செயல்பட்டு வந்தார். தற்போது, உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி, அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டிருப்பதால், அவருக்கு பதிலாக, கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சர் நியமிக்கப்படவில்லை.
வழக்கமாக, அரசு செயல்படுத்தி வரும் திட்ட பணிகளை மேலாண்மை செய்வது, வார்டுகளுக்குள் நடக்கும் வேலையை முடுக்கி விடுவது, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அதிகாரிகள் துணையோடு அதை நிறைவேற்றித் தருவது போன்ற விஷயங்களை பொறுப்பு அமைச்சர்கள் செய்து வருகின்றனர்.
கட்சி தலைமையோடு நெருக்கமாக இருந்ததால், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செயல்பட்ட செந்தில் பாலாஜியின் கண் அசைவில் அனைத்து பணிகளும் மாவட்டத்துக்குள் நடந்தன.
தற்போது அப்பணிகள் தடைபட்டுள்ளன. இதனால், அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் எதிர்கட்சிகளைச் சேர்ந்தோர் என்பதால், மாவட்ட தி.மு.க.,வினரும் திடீர் சுணக்கமாகி உள்ளனர்.
இதனால், கட்சிப் பணியிலும் பெரும் தொய்வு ஏற்பட்டிருப்பதாக தி.மு.க., வினரே கூறுகின்றனர்.
இருந்தபோதும், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமாக இருப்போர் சிலர், மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளின் 'டெண்டர்' இறுதி செய்யும் விஷயத்தில் மட்டும் வழக்கம் போல் இன்னும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருவதாக ஆதங்கப்படுகின்றனர்.
தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'கோவைக்கு பொறுப்பு அமைச்சர் யார் என்பது குறித்த அறிவிப்பு எதுவும் வரவில்லை. மாவட்டத்தில் கட்சிப் பணியோடு, ஆட்சிப் பணியையும் முடுக்கி விடும் பணியை செய்யும் பொறுப்பு அமைச்சராக முத்துசாமி பணியாற்றியபோது, செந்தில் பாலாஜி அளவுக்கு அவரால் வேகமாக செயல்பட முடியவில்லை.
தேர்தல் நெருக்கத்தில், பொறுப்பு அமைச்சரின் பணி, கட்சிக்கு அவசியம் தேவை என்பதால், யாரையாவது நியமிக்க வேண்டிய கட்டாயம் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. யாரை பொறுப்பு அமைச்சராக நியமித்தாலும், அவர் பின்னால் இருந்து செந்தில் பாலாஜிதான் செயல்படுவார். அதனால், கட்சியில் அவருக்கு கூடுதலாக மண்டல பொறுப்பு வழங்க வாய்ப்புள்ளது' என்றனர்.




