நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகரிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத்தை திறந்த பிரதமர் பேச்சு

2

திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தில், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, “இந்த துறைமுகம், கேரளாவுக்கு மட்டுமின்றி இந்த தேசத்திற்கே பொருளாதார ஸ்திரத்தன்மையை கொண்டு வரும்,” என, தெரிவித்தார்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

ரூ. 8,867 கோடி

இம்மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்ஞம் என்ற இடத்தில், 8,867 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட சர்வதேச துறைமுகம் கட்டப்பட்டுள்ளது.

'அதானி குழுமம்' கட்டியுள்ள இந்த துறைமுகத்தை நேற்று திறந்து வைத்து, பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து பேசியதாவது:

மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் வந்து செல்லும் வகையில், இந்த துறைமுகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதுவரை நம் நாட்டின், 75 சதவீத சரக்கு பரிமாற்ற நடவடிக்கைகள் வெளிநாட்டு துறைமுகங்களில் நடத்தப்பட்டன. இதன் விளைவாக நம் நாட்டிற்கு குறிப்பிடத்தக்க வருவாய் இழப்பு ஏற்பட்டது.

விழிஞ்ஞம் துறைமுகத்தால் இந்த நிலை மாற உள்ளது. வெளிநாடுகளில் செலவிடப்பட்ட நிதி இப்போது உள்நாட்டு வளர்ச்சிக்குச் செலவிடப்படும்.

விழிஞ்ஞம் மற்றும் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும். நாட்டின் செல்வம் அதன் குடிமக்களுக்கு நேரடியாகப் பயனளிப்பதை உறுதி செய்யும்.

பிரமாண்டம்

இந்த துறைமுகத்தின் சரக்கு பரிமாற்ற மையத்தின் திறன், எதிர்காலத்தில் மூன்று மடங்கு அதிகரிக்கும்.

இவ்வளவு பெரிய பிரமாண்ட துறைமுகத்தை, அதானி குழும தலைவர் கவுதம் அதானி குஜராத்தில் கட்டாமல், கேரளாவில் கட்டியுள்ளார்.

இது குஜராத் மக்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கும். அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க கவுதம் அதானி தயாராக இருக்க வேண்டும்.

மாநில துறைமுக அமைச்சர் வி.என்.வாசவன், பெருநிறுவனமான அதானி குழுமத்தை கம்யூனிஸ்ட் அரசின் கூட்டாளி என குறிப்பிடுவது, நாட்டில் நிகழ்ந்து வரும் மாற்றங்களைக் காட்டுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன், அதானி குழும தலைவர் கவுதம் அதானி, காங்., - எம்.பி., சசி தரூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

'பலரால் இன்று துாங்க முடியாது!'

துறைமுக துவக்க விழாவில், மாநில முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் உள்ளிட்டோர் பங்கேற்று பிரதமருடன் மேடையில் அமர்ந்திருந்தனர். இதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேசுகையில், “மேடையில் அமர்ந்திருக்கும் முதல்வர் பினராயி விஜயன், 'இண்டி' கூட்டணியின் மிக முக்கிய துாணாக இருப்பவர். காங்., - எம்.பி., சசி தரூரும் இங்கு உள்ளார். இது பலருக்கு உறக்கமற்ற இரவாக மாறப்போகிறது,” என்றார். பிரதமரின் பேச்சை மொழிபெயர்த்தவர், இதை சரியாக மொழிபெயர்க்கவில்லை. இதை கவனித்த மோடி, “இந்த செய்தி யாருக்காக சொல்லப்பட்டதோ அவர்களை சரியாக சென்று சேர்ந்திருக்கும்,” என்றார்.





ஆதிசங்கரர், போப் பிரான்சிசை

நினைவுகூர்ந்த பிரதமர்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:கேரளாவில், ஆதிசங்கரர் பிறந்த காலடி என்ற ஊருக்கு மூன்றாண்டுகளுக்கு முன் வந்தேன். அந்த தெய்வீக அனுபவத்தை என்றும் மறக்க முடியாது. என் சொந்த தொகுதியான வாரணாசியின் காசியிலும், உத்தரகண்டின் கேதார்நாத் கோவிலிலும் ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மை உடைய பூமியான கேரளாவில் தான், உலகின் மிக பழமையான புனித தாமஸ் தேவாலயம் உள்ளது. சமீபத்தில் நம்மைவிட்டு பிரிந்த போப் பிரான்சிஸ் அளித்த பங்களிப்பை இந்த உலகம் என்றும் நினைவில் வைத்திருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.





1,700 கோடி ரூபாய் மிச்சம்

 விழிஞ்ஞம் துறைமுகம் நம் நாட்டின் முதல், 'மெகா டிரான்ஸ்ஷிப்மென்ட்' துறைமுகம் என்ற பெருமையை பெற்றுள்ளது  அதாவது, வெளிநாட்டில் இருந்து வரும் பிரமாண்ட சரக்கு கப்பல்களை நிறுத்தவும், அதில் உள்ள சரக்குகளை இறக்கி வைத்து, அவற்றை இறக்குமதி செய்துள்ள நாடுகளுக்கு வேறு கப்பல்களில் அனுப்பி வைக்கும் பணிகளை செய்யும் துறைமுகங்களே, 'டிரான்ஸ்ஷிப்மென்ட்' துறைமுகம் என்று அழைக்கப்படுகிறது இதற்கு முன், நம் நாட்டில் உள்ள துறைமுகங்களில் பிரமாண்ட சரக்கு கப்பல்களை நிறுத்த வசதி இல்லை. இதன் காரணமாக, நம் நாட்டுக்கு வரும், 75 சதவீத சரக்குகள், சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் இறக்கப்பட்டு அங்கிருந்து வேறு கப்பல்களில் நம் நாட்டை வந்து அடைந்தன ஒரு, 'கன்டெய்னர்' சரக்கு இறக்கி, ஏற்ற, நம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்கள், 80 முதல், 100 அமெரிக்க டாலர்கள் வரை செலவு செய்கின்றனர். இனி அந்த செலவு குறையும். ஆண்டுக்கு 1,700 கோடி ரூபாய் மிச்சமாகும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு - மேற்கு கடல் பாதையில் விழிஞ்ஞம் துறைமுகம் அமைந்துள்ளது இந்த துறைமுகம், 65 அடி அளவிற்கு இயற்கை கடல் ஆழம் உடையது. அதை மேலும் ஆழப்படுத்தி துறைமுகம் கட்டப்பட்டுஉள்ளதால்; மிகப்பெரிய கப்பல்களையும் கையாளும் திறன் பெற்றுள்ளது தமிழகத்தின் சேலம் - கன்னியாகுமரி இடையிலான தேசிய நெடுஞ்சாலை - 47, இந்த துறைமுகத்தில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது. ரயில் நிலையம் 12 கி.மீ., தொலைவிலும், திருவனந்தபுரம் விமான நிலையம் 15 கி.மீ., தொலைவிலும் உள்ளன.

Advertisement