ஆடு மேய்த்தவர் அடித்துக் கொலை உடல் சாக்கில் கட்டி கிணற்றில் வீச்சு

காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் ஆடு மேய்த்த முருகனை 45, அடித்து கொலை செய்து உடலை சாக்கில் கட்டி கிணற்றில் வீசியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காரியாபட்டி முஷ்டக்குறிச்சியை சேர்ந்த காசி என்பவரின் தோட்டத்தில் நேற்று காலை 9:00 மணிக்கு சாக்கு மூடை மிதந்தது. போலீசார், தீயணைப்பு வீரர்கள் நேற்று மதியம் மூடையை மீட்டனர். அதில் கழுத்து அறுக்கப்பட்டு, கை, கால்களில் வெட்டுக்காயத்துடன், கயிற்றால் கட்டப்பட்டு ஆண் பிணம் இருந்தது.

விசாரணையில் அவர் நாகனேந்தலைச் சேர்ந்த முருகன் 45, என்பதும், ஆடு மேய்த்தும் தெரிய வந்தது. அவர் அடிக்கடி ஆடு வாங்க, விற்க வெளியூர்களுக்கு சென்று வருவார். இரு தினங்களுக்கு முன் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மர்ம நபர்கள் கொலை செய்து கிணற்றில் வீசி சென்றுள்ளனர்.

கிணற்று அறையில் மது குடித்த அடையாளங்கள் உள்ளன. அதனால் மது போதையில் ஏற்பட்ட தகராறில் முருகனை அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். எஸ்.பி., கண்ணன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement