பெங்களூரில் இடி, மின்னலுடன் மழை

பெங்களூரு: பெங்களூரில் இடி, மின்னலுடன் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. நகரில் 20 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. கனமழையால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

மேற்கு மத்திய பிரதேசத்தில் இருந்து வடக்கு கேரளா வரை வடக்கு - தெற்கு பகுதியில் ஏற்பட்டு உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஹரியானா வழியாக நகர துவங்கி உள்ளது.

இதனால் குஜராத்தின் விதர்பா முதல் கன்னியாகுமரி வரை கடல் மட்டத்தில் 1.50 கி.மீ., உயரத்தில் சூறாவளி ஏற்பட்டு உள்ளது என்று, கர்நாடக வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.

இந்த சூறாவளியால் கர்நாடகாவில் பெரும்பாலான இடங்களில், மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மழை பெய்தது. குறிப்பாக பெங்களூரில் கனமழை கொட்டி தீர்த்தது. மதியம் 3:30 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்தது. முதலில் மிதமாக பெய்தது. நேரம் செல்ல, செல்ல மழையின் தீவிரம் அதிகரித்தது. இரவு 7:00 மணிக்கு மேல் கடுமையான இடி, மின்னலுடன் மழை பெய்தது.

7.8 செ.மீ.,



சிவாஜிநகர், ராஜாஜிநகர், சேஷாத்திரிபுரம், ஹெப்பால், வசந்த்நகர், ஜெயமஹால் சாலை, இந்திராநகர், எலஹங்கா, ஹெப்பால், சஞ்சய்நகர், மேக்ரி சதுக்கம், சிவானந்தா சதுக்கம், அனந்தராவ் சதுக்கம், காந்திநகர். கே.ஆர்.சதுக்கம், கே.ஆர்.மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

அதிகபட்சமாக கெங்கேரியில் 7.8 செ.மீ., மழை பெய்தது. ஆர்.ஆர்.நகரில் 4.3 செ.மீ., - ஹெம்மிகேபுராவில் 3.55 செ.மீ., - ஹெச்.கொல்லஹள்ளியில் 3.5 செ.மீ., - நாயண்டஹள்ளியில் 3.5 செ.மீ., - பீன்யாவில் 3.25 செ.மீ.,.

பாகல்குன்டேயில் 3.1 செ.மீ., - ஹீரோஹள்ளியில் 3 செ.மீ., - ஹம்பி நகரில் 2.95 செ.மீ., சொக்கசந்திராவில் 2.9 செ.மீ., ஷெட்டிஹள்ளியில் 2.75 செ.மீ., - தொட்டபிதரகள்ளுவில் 2.35 செ.மீ., - பசவேஸ்வராநகரில் 2.3 செ.மீ., - ஜக்கூரில் 1.8 செ.மீ., - நாகபுராவில் 1.7 செ.மீ., - காட்டன்பேட்டில் 1.6 செ.மீ., - ராஜாஜிநகரில் 1.55 செ.மீ., - தயானந்தநகரில் 1.3 செ.மீ., - வித்யாரண்யபுராவில் 1.1 செ.மீ., - ஹெச்.ஏ.எல்., விமான நிலைய பகுதியில் 1 செ.மீ., மழை பெய்து உள்ளது.

உயிர் சேதம்



பல இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், மரங்களும் சாய்ந்து விழுந்தன. மாநகராட்சியின் தாசரஹள்ளி, எலஹங்கா, தெற்கு மண்டலங்களில் தலா 4; மேற்கில் 5; ஆர்.ஆர்.நகரில் 2 என 19 மரங்கள் சாய்ந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. கனமழையால் முக்கிய சாலைகளில், தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

குறிப்பாக விமான நிலையம் செல்லும் சாலையில், ஹெப்பால் மேம்பாலத்தில் பணிகள் நடப்பதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்றும், நாளையும் வார இறுதி நாட்கள் என்பதால், பெங்களூரில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, மெஜஸ்டிக்கில் இருந்து செல்லும், ஆம்னி பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர். பல இடங்களில் இருந்து மெஜஸ்டிக்கிற்கு ஆட்டோ, வாடகை கார்கள் வந்தவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டனர். வாகனங்கள் அடித்த ஹாரன்கள் காதின் சவ்வை கிழிக்கும் வகையில் இருந்தது.

தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடை கால்வாயில் தண்ணீர் பாய்ந்து சென்றது. சாலையோரம் கடை வைத்து இருப்போர், தொழிலுக்கு இந்த மழை பாதகத்தை ஏற்படுத்தியது. மாலை நேரத்தில் மழை பெய்வதால், வெளியே செல்ல முடியாமல் மக்களும் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என்று, வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

Advertisement