பிறப்புச் சான்று தவறை சரி செய்ய நகராட்சி கமிஷனருக்கு  அதிகாரம்; உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: பிறப்புச் சான்றில் தவறு இருப்பதாக சுட்டிக்காட்டப்படும்போது, ​அதை சரி செய்ய பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகளின்படி நகராட்சி கமிஷனருக்கு அதிகாரம் உண்டு என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த எட்வின் தாக்கல் செய்த மனு:

எனது மனைவிக்கு 2020ல் மார்த்தாண்டத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இத்தகவலை மருத்துவமனை நிர்வாகம் குழித்துறை நகராட்சிக்கு தெரிவித்தது. பிறப்பை பதிவு செய்யும் போது, ​​தந்தையின் பெயரை எஸ்.எட்வின் என்பதற்கு பதிலாக, சி.சுரேஷ்குமார் என தவறாக குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் குழந்தையின் பெயருக்கு முந்தைய முதலெழுத்து (இனிஷியல்) 'இ' என்று சரியாக உள்ளது. குழந்தையை ஜூனில் பள்ளியில் சேர்ப்பதற்காக பிறப்புச் சான்றிதழ் பெற்றபோது தவறு நடந்துள்ளதை கவனித்தேன். தந்தையின் பெயரை 'சுரேஷ் குமார்' என்பதற்கு பதிலாக 'எட்வின்' என சரிசெய்து பிறப்புச் சான்றை மீண்டும் வழங்கக்கோரி உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.

நகராட்சி தரப்பு: மருத்துவமனை வழங்கிய விபரத்தை பதிவிடுவதுதான் நகராட்சியின் பணி. நகராட்சி நிர்வாகத்தால் தவறு செய்யப்படவில்லை. இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதி: இந்நாட்டில் தந்தையின் பெயரை முதலெழுத்தாக எடுத்துக்கொள்வது வழக்கம். நகராட்சி தரப்பு சமர்ப்பித்த விண்ணப்பத்தை ஆய்வு செய்ததில், அதை பூர்த்தி செய்ததில் தவறு நடந்துள்ளது. குழந்தையின் முதலெழுத்து சரியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தந்தையின் பெயர் 'சுரேஷ் குமார்' என உள்ளது. இது ஒரு வெளிப்படையான தவறு. சுரேஷ் குமார் என்ற தந்தையின் பெயரைக் கொண்ட ஒரு நபரின் முதலெழுத்து 'இ' அல்ல 'எஸ்' என இருக்கும்.

தவறு கவனத்திற்கு கொண்டுவரப்படும்போது, அதை சரி செய்ய நகராட்சி கமிஷனர் அதிகாரமற்றவர் என அர்த்தமல்ல. தவறு இருப்பதாக சுட்டிக்காட்டப்படும்போது, ​அதை சரி செய்ய பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகளின்படி நகராட்சி கமிஷனருக்கு அதிகாரம் உண்டு.

ஜூன் 1 ல் கல்வியாண்டு துவங்குகிறது. மனுதாரரின் மனுவை 4 வாரங்களில் கமிஷனர் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement