மீனாட்சி திருக்கல்யாணத்தை காண ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு; பக்தர்கள் முன்னிலையில் குலுக்கல் நடைபெறுமா
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண ஆன்லைனில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்த நிலையில் சர்ச்சையை தவிர்க்க வெளிப்படை தன்மையுடன் பக்தர்கள் முன்னிலையில் குலுக்கல் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் மே 8ம் தேதி காலை நடக்கிறது. இதற்காக ஏப்.,29 முதல் நேற்று(மே 2) இரவு 9:00 மணி வரை ஆன்லைனில் சில கட்டுப்பாடுகளுடன் முன்பதிவு நடந்தது. கோயில் ஆடிவீதியில் சில ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதால், அதை கணக்கிட்டு முன்பதிவு செய்தவர்களில் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து சம்பந்தப்பட்டோருக்கு இன்று எஸ்.எம்.எஸ்., இமெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
அதை மேலசித்திரைவீதியில் உள்ள பிர்லா மந்திரில் மே 4 முதல் 6 வரை காண்பித்து ரூ.500, ரூ.200 செலுத்தி டிக்கெட் பெற வேண்டும். சில ஆண்டுகளாக இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. கடந்தாண்டு முன்பதிவு செய்தவர்களில் பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. மறைமுகமாக குலுக்கல் நடந்ததால் இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புண்டு என குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் இந்தாண்டும் குற்றச்சாட்டு எழ வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க பொறியியல் கல்லுாரிகளுக்கு கவுன்சிலிங் நடக்கும்போது எல்லோர் முன்னிலையில் 'ரேண்டம்' எண் குலுக்கல் வெளிப்படையாக நடத்துவது போல், பக்தர்கள் முன்னிலையில் குலுக்கல் நடத்தி தேர்வு செய்தால் சர்ச்சை ஏற்படாது.
பக்தர்கள் கூறியதாவது: ஆன்லைனில் முன்பதிவு செய்த போது ஆதாரின் உண்மை தன்மையை அறிய 'ஓ.டி.பி.,' அனுப்பப்பட்டது. அதைதொடர்ந்து முன்பதிவுக்கும் 'ஓ.டி.பி.' அனுப்பப்பட்டது. இதற்கு பல நிமிடங்கள் செலவிட வேண்டியிருந்தது. அம்மன் திருக்கல்யாணத்தை காண காத்திருப்பதைவிட இது பெரிதாக தெரியவில்லை. திருக்கல்யாணத்தை இலவசமாக காண வருவோரை முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கோயிலுக்குள் அனுமதிக்க உள்ளனர். அதேபோல் முதலில் முன்பதிவு செய்பவருக்கே முன்னுரிமை என்று அறிவித்து, முன்பதிவு செய்ததும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தியவர்களுக்கு பிரத்யேக எண், அடையாள குறிப்பும் வழங்கினாலே போதும். குறிப்பிட்ட எண்ணிக்கை முடிந்ததும் 'பதிவு முடிந்துவிட்டது'
என அறிவிக்கலாம். இதன்மூலம் கால விரயமும், அலைச்சலும் குறையும். இதுகுறித்து கோயில் நிர்வாகமும், அறநிலையத்துறையும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
மேலும்
-
டில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய கும்பல் சிக்கியது; வங்க தேசத்தினர் 6 பேர் உட்பட 11 பேர் கைது
-
பாக்., பெண்ணை மணந்த சிஆர்பிஎப் வீரர் பணி நீக்கம்
-
மருத்துவமனை மீது வான் வழி தாக்குதல்: தெற்கு சூடானில் 4 பேர் பலி
-
பழிதீர்க்குமா சென்னை? பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சு தேர்வு
-
ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கான காரணம் தெரியவில்லை: சொல்கிறார் கார்கே
-
பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் உமர் சந்திப்பு!