வெற்று அறிவிப்பாக மாறுகிறதா? உழவர் தொடர்பு அலுவலர் திட்டம் 2.0

1

திருப்பூர்; கடந்த இரு ஆண்டுகள் முன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, அரசாணையாக வெளியிடப்பட்ட 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0', இம்மாத இறுதிக்குள் அமல்படுத்தாவிடில், அரசின் வெற்று அறிவிப்பில் இதுவும் ஒன்றாகிவிடும் என, விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.


தமிழக்தில், வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்ந்த அனைத்து துறைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, அனைத்து துறைகளின் திட்டங்களும் விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க செய்யும் நோக்கில், 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0' கொண்டு வரப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.


இத்திட்டத்தில், 3 முதல் 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம் செய்யப்படுவர். தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பையும் பெற்று, விவசாய நிலத்தில் பயிர் சாகுபடி, விவசாயிகளுக்கான ஆலோசனை, தொழில்நுட்ப பயிற்சி, சந்தை வாய்ப்பு என அந்த பயிர் வளர்ச்சிக்குரிய முழுப் பொறுப்பையும் அந்த அலுவலர் தான் ஏற்க வேண்டும் உட்பட பல வழிகாட்டுதல் வழங்கப்பட்டன.


இத்திட்டம் அமலுக்கு வந்தால் வேளாண், தோட்டக்கலை சார்ந்துள்ள பல்வேறு உட்துறைகள், ஒன்றாக இணைக்கப்படும். அதன் வாயிலாக, உபரி ஊழியர் நிலை கூட வரலாம்; அவர்கள் மாற்று துறைக்கு பணி மாறுதல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டு, அரசுக்கு பல கோடி ரூபாய் செலவினம் குறையும் என கூறப்பட்டது.


ஆனால், திட்டம் இதுவரை அமலுக்கு வராத நிலையில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில், எதிர்க்கட்சியினர் இவ்விவகாரத்தை கிளப்பினர். 'நடப்பு நிதியாண்டில், அமல்படுத்தப்படும்,' என, அமைச்சர் பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.


தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க இயற்கை வேளாண்மை அணி மாநில ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி கூறியதாவது:
தற்போதைய சூழலில் பயிர் சாகுபடி, பொறியியல் சார்ந்த பணிகள், சந்தை, தொழில்நுட்ப ஆலோசனை என ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு துறை அதிகாரிகளை அணுக வேண்டியுள்ளது. இது, மிகவும் சிக்கலானது. 'உழவர் தொடர்பு அலுவலர் 2.0 திட்டம்' அமலுக்கு வந்தால், 2, 3 கிராமத்துக்கு ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்படுவார். அவரே அனைத்து துறை சார்ந்தும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய அரசு திட்டங்களை பெற்றுக் கொடுப்பார்.


இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறைகளுக்குள் சில கருத்து முரண் இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றை சரி செய்து, விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டமாக அதை செயல்படுத்த வேண்டும். அல்லது, வெற்று அறிவிப்பாகவே அது மாறும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement