தி.மு.க., கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி சப் கலெக்டர் அலுவலகத்தை வி.ஏ.ஓ.,க்கள் முற்றுகை

1

திண்டிவனம் : தி.மு.க., கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி, திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தை வி.ஏ.ஓ.,க்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

திண்டிவனம் நகராட்சி, 28 வது வார்டு தி.மு.க.,கவுன்சிலர் சந்திரன். இவர், கடந்த 29ம் தேதி தனது வார்டை சேர்ந்த பெண்ணிற்கு திருமண சான்றிதழ் பெற, வி.ஏ.ஓ., சிற்றரசுவின் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது, கவுன்சிலரின் ஆதரவாளருக்கும், வி.ஏ.ஓ.,விற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பானது.

இதுகுறித்து வி.ஏ.ஓ., கொடுத்த புகாரின் பேரில் சந்திரன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிந்து திண்டிவனம் போலீசார் மணிகண்டன், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 6:00 மணிக்கு, வி.ஏ.ஓ., வை தாக்கிய கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தை வி.ஏ.ஓ.,க்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் சப் கலெக்டரை சந்தித்து, குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தினர்.

வி.ஏ.ஓ.,க்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், குற்றவாளியை கைது செய்யாவிட்டால், திண்டிவனம் உட்கோட்டத்திலுள்ள வி.ஏ.ஓ.,க்கள் இன்று 3 ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் சாதி சான்றிதழ் உள்ளிட்ட 19 வகை சான்றிதழ் வழங்கும் பணியை புறக்கணிக்கப்போம்,' என்றனர்.

Advertisement