பாகிஸ்தானால் வெற்றி பெற முடியாது: பரூக் அப்துல்லா

5

ஸ்ரீநகர்: '' இந்தியாவிற்கு எதிராக இதுவரை பாகிஸ்தான் வெற்றி பெற்றது இல்லை. இனியும் வெற்றி பெற மாட்டார்கள்,'' என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறினார்.


இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு ஆதரவாக காஷ்மீர் எப்போதும் இருக்காது. இனியும் இருக்காது. பஹல்காமில் நடந்த தாக்குதலில் சில நாட்களுக்கு முன்னர் திருமணமானவரும், ரத்த வெள்ளத்தில் கிடந்த தந்தையின் உடலையும் குழந்தை பார்த்ததையும் பார்த்து நாம் அழுதோம். இந்த கொடூரத்தை செய்தவர்கள் மனித நேயத்திற்கு எதிரானவர்கள். அவர்கள் மனிதர்களே கிடையாது. அவர்கள் முஸ்லிம்கள் இல்லை. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக உள்ளோம்.


அவர்களின் தியாகம் வீண்போகாது. பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 35 ஆண்டுகளாக அதனை நாம் அனுபவித்து வருகிறோம். அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இனியும் வெற்றி பெற மாட்டார்கள்.


சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தான போது காஷ்மீர் மக்களுடன் ஆலோசனை நடத்தப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தால், காஷ்மீர் பிராந்தியம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் அனுமதி இல்லாமல் மின் நிலையங்கள் கட்டமுடியவில்லை. அவர்களின் அனுமதி இல்லாமல் ஒரு வாளி தண்ணீர் கொண்டு வர முடியாது. அந்த நதியில் இருந்து தண்ணீரை ஜம்முவுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.


இந்தியா மஹாத்மா காந்தியின் நிலம். சிந்து நதியில் இருந்து தண்ணீரை நிறுத்த போகிறோம் என நாம் எச்சரிக்கை கொடுத்து உள்ளோம். ஆனால், நாம் அவர்களை கொல்ல மாட்டோம். அவர்களை போல் நாம் கொடூரர்கள் கிடையாது. சொந்த மக்களுக்கு எதிராக அவர்கள் அட்டூழியத்தை நடத்துகின்றனர். பலுசிஸ்தான் மற்றும் சிந்து மாகாணத்தில் சூழ்நிலையை பார்க்க வேண்டும். தங்களது சொந்த நிலத்தை காப்பாற்ற முடியாதவர்கள், நம்மை அழிக்க முயற்சி செய்கிறார்கள்.


காஷ்மீர் பண்டிட்களை கொன்றது யார் நான் முதல்வராக இருந்த போது நான் செல்ல முடியாத இடங்கள் இருந்தது. ஆனால், மெகபூபா முப்தி பயங்கரவாதிகளின் வீட்டிற்கு சென்றார். நாம் எப்போதும ்பயங்கரவாதத்திற்கு ஆதரவாக இருந்தது கிடையாது. பாகிஸ்தானியர்களாக இருக்கவும் மாட்டோம். காஷ்மீர் இந்தியாவின் மகுடம். அமர்நாத் இங்கு உள்ளார். அவர்நம்மை பாதுகாப்பார்.


அமர்நாத் யாத்திரை வர உள்ளவர்கள் பயப்பட கூடாது. கடவுள் அமர்நாத் அனைவரையும் பாதுகாப்பார். மனதில் அமர்நாத் இல்லாதவர்கள் தான் பயப்படுவார்கள். அனைவரும் வந்து தரிசனம் செய்து அவரின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement