பட்ஜெட் தொடரில் அறிவிப்பு வராததால்; காத்திருந்த சிங்கம்புணரி மக்கள்

இத்தாலுகாவின் முக்கிய பாசன ஆதாரமாக பெரியாறு 7வது பிரிவு நீட்டிப்புக் கால்வாய், விரைவில் நிரந்தரமாக்கி தரப்படும் என்ற உறுதி அளிக்கப்பட்டதால் விவசாயிகள் கால்வாய் கட்ட நிலம் வழங்கினர்.

மற்ற நிரந்தர கால்வாய்கள் அனைத்தும் சிமென்ட் கால்வாயாக மாற்றப்பட்டதாலும், அதன் பாசன பகுதிகளில் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி பாசனப்பரப்பு குறைந்ததாலும் வீணாகும் தண்ணீர் குறைந்து, அணையில் தண்ணீர் மிச்சப்பட்டு வருகிறது.

தங்களுக்கு ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி 7வது பிரிவு கால்வாயை நிரந்தரமாக்க விவசாயிகள் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிச்சாமி, பன்னீர் செல்வம் தற்போதைய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி வரை அனைவரிடமும் இதுகுறித்து மனு அளிக்கப்பட்டது. அதிகாரிகள் தரப்பிலும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டதை தொடர்ந்து நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வரலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தவிர இத்தாலுகாவில் குறிப்பாக எஸ்.புதுார் ஒன்றியத்தில் கல்லூரி வசதி இல்லாததால் பிளஸ் 2 க்கு பிறகு கல்லூரிகளில் சேர முடியாமல் மாணவர்கள் குறிப்பாக பெண்களின் கல்லூரி கனவு கானல் நீராகி வருகிறது. இப்பகுதியில் அரசு கலைக் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளை திறக்கவும் ஒருமித்த கோரிக்கை இருந்தது.

சிங்கம்புணரியில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பல்வேறு நகரங்களுக்கு பஸ் போக்குவரத்தை பயன்படுத்தும் நிலையில், இங்கு தனி பஸ் டெப்போ இல்லாதது பெரும் சுமையாக இருந்து வருகிறது. சிங்கம்புணரியில் பஸ் டெப்போ அமைக்க 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் பெரியகருப்பன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், பிறகு அது கைவிடப்பட்டு கிடப்பில் உள்ளது. பஸ் டெப்போ அறிவிப்பும் வரும் என்றும் இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

பட்ஜெட்டில் இவை குறித்து எந்த அறிவிப்பும் வராத நிலையில் மானிய கோரிக்கையிலோ, அல்லது 110 விதியின் கீழ் முதல்வரோ அறிவிக்க கூடும் என மக்கள் கடைசி வரை காத்திருந்தனர். ஆனால் கூட்டத்தொடர் முடிந்து சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த மூன்று கோரிக்கைகளும் இப்பகுதி மக்களின் முதன்மையான அடிப்படை தேவையாக இருப்பதால் இவற்றை விரைந்து நிறைவேற்ற மக்களும் விவசாயிகளும் மீண்டும் அரசையும், மக்கள் பிரதிநிதிகளையும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

Advertisement