பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்கள் கசிவு; பஞ்சாபில் இருவர் கைது

6

சண்டிகர்: பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு ராணுவ ரகசியங்கள் கசியவிட்ட,
பாலக் ஷெர் மாசிஹ் மற்றும் சூரஜ் மாசிஹ் ஆகிய இருவரை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்.



பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடன் அனைத்து உறவுகளையும் மத்திய அரசு முறித்து கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு ராணுவ ரகசியங்கள் கசியவிட்ட,பாலக் ஷெர் மாசிஹ் மற்றும் சூரஜ் மாசிஹ் ஆகிய இருவரை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்.



இது குறித்து, பஞ்சாப் மாநில டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது: ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு கசிய விட்ட, பாலக் ஷெர் மாசிஹ் மற்றும் சூரஜ் மாசிஹ் ஆகிய இருவரை அமிர்தசரஸ் போலீசார் கைது செய்தனர். இவர்கள் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.


முதற்கட்ட விசாரணையில், தற்போது அமிர்தசரஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹர்ப்ரீத் சிங் மூலம் நிறுவப்பட்ட பாகிஸ்தான் உளவுத்துறை செயல்பாட்டாளர்களுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.



விசாரணைக்கு பிறகு முழு விபரம் தெரிய வரும். தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் பஞ்சாப் போலீசார் முழு வீச்சில் பணியாற்றுகின்றனர். நமது ஆயுதப் படைகளின் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement