கவர்னருடன் அதிகார போட்டியில்லை: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: '' கவர்னருடன் அதிகார போட்டி நடத்தவில்லை,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்திய மக்களுக்கு வெற்றி
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக கல்வியாளர்கள் நடத்திய பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழக மக்கள் தான் சுயாட்சி நாயகர்கள். என்னை பொறுத்தவரை வெற்றி என்பது குழு முயற்சி. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என்பது, தமிழக மக்களுக்கும் தமிழகத்திற்கும் கிடைத்த வெற்றி. இந்திய மக்களுக்கு, சுப்ரீம் கோர்ட் மூலம் தமிழகம் பெற்றுக் கொடுத்த வெற்றி.
என்ன மரியாதை
மக்களுக்கு தேவையான திட்டங்களை தீ்டடினால், மத்திய அரசின் ஏஜென்ட் ஆக நியமிக்கப்பட்ட தற்காலிகமாக தங்கி உள்ள கவர்னர் தடுத்து நிறுத்த முடியும் என்றால், மக்களுக்கு என்ன மரியாதை? ஓட்டுக்கு என்ன மரியாதை? கவர்னர் பதவி என்பது பயனில்லாத ரப்பர் ஸ்டாம்ப் பதவி; உங்களுக்கு சம்பளம் தருவது மாநில அரசு. பல்கலையை நிர்வகிக்கும் துணைவேந்தரை கவர்னர் நியமிப்பது எப்படி நியாயம்?
மிகப்பெரிய வெற்றி
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பூனைக்கு மணி கட்டி உள்ளனர். மாநில அரசின் சட்டத்தின் மேல், ஒரு மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டு உள்ளது. மசோதாவை நிறுத்திவைப்பதாக இருந்தால் 3 மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும். ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டியிருந்தால் 3 மாதத்திற்குள் அனுப்ப வேண்டும். 2வது முறை வந்தால் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக்கூறியுள்ளனர். கவர்னர், ஜனாதிபதிக்கு காலக்கெடு வைத்தது மிகப்பெரிய வெற்றி.
அதிக அதிகாரம்
மக்களால் தேர்வு செய்யப்படும் அரசுக்கு மதிப்பளிக்கும் வகையில் கவர்னர் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர். ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கப்பட்டு உள்ளது. இதைதாங்கி கொள்ள முடியாத துணை ஜனாதிபதி, பார்லிமென்டிற்கு அதிக அதிகாரம் உள்ளது என்கிறார். இதனை தான் நாங்கள் சொன்னோம். சட்டசபையை விட கவர்னருக்கு அதிக அதிகாரம் உள்ளதா?
செல்வாக்கு இல்லை
நாங்கள் கவர்னருடன் அதிகார போட்டி நடத்தவில்லை. எங்களுக்கும் அவருக்கும் பகை கிடையாது. சமீபத்தில் கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் நன்றாக பேச விட்டு தான் வந்தோம். அரசியலில் வேறுபாடு இருந்தாலும், மனிதர்களுடன் பண்பாடு நட்புணர்வு காக்கப்பட வேண்டும்.நாளை இவருக்கு பதில் வேறு கவர்னர் வந்து, இதேபோன்று செய்தால், அவரின் செயல்பாடுகளை எதிர்ப்போம். ஆனால், எங்களது உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்.
என்னை பொறுத்தவரை இதே கவர்னர் தொடர வேண்டும். அப்போது தான் நமது செல்வாக்கு வளரும். அவர்கள் செல்வாக்கு குறையும். அவர்களுக்கு செல்வாக்கு இல்லை.
எச்சரிக்கை
திராவிட மாடல் அரசு இளைஞர்களுக்கான அரசு. இளைஞர்களுக்காக செயல்படுத்திய திட்டம் எல்லாம் அனைவருக்கும் தெரியும். கல்வி நிலையங்களில் அறிவியல் கருத்துகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும்.
பகுத்தறிவுக்கு எதிரான முட்டாள்தனமான கட்டுக்கதைகள், மூடநம்பிக்கை பரப்பும் இடமாக இருக்கக்கூடாது. அறிவியல் ரீதியான அணுகுமுறை, சமூக நீதியை கற்றுத்தரும் இடமாக கல்வி நிலையங்கள் இருக்க வேண்டும். இதற்கு மாறான நிகழ்ச்சி நடத்துகிறதோ, இதற்கு எதிராக பேசுபவர்களை அழைத்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும். தமிழக இளைஞர்களின் எதிர்காலத்திற்காக பல்கலைகள் வளர்த்து எடுக்க முயற்சி செய்கிறோம். படிப்பு யாராவது பயனற்றது என சொல்பவர்களை அமைதியாக வெளியேற்றுங்கள்.
கல்வி தான் பறிக்க முடியாத சொத்து. மாணவர்களை படிக்க முடியாத படி தேசிய கல்விக் கொள்கை மற்றும் விஸ்வகர்மா திட்டங்களை கொண்டு வருகின்றனர். சமூக வலைதளங்கள் மூலம் தவறான கருத்துகளை பரப்புகின்றனர். இவ்வாறு முதல்வர் பேசினார்.










மேலும்
-
ஐ.எம்.எப்., செயல் இயக்குநர் சுப்ரமணியம் நீக்கம்; 6 மாதத்திற்கு முன் பொறுப்பிலிருந்து விடுவிப்பு
-
பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்து தம்பதி பரிதாப பலி; அதிகாலை வேளையில் சம்பவம்
-
கோழிக்கோட்டில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை
-
பெரம்பலூரில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இருவர் உயிரிழப்பு
-
'சாப்ரான் பெனகோட்டா'ருசி... ஆஹா... அடடா...அய்யோடா!
-
குறள் சொல்லும் குரல்