குறள் சொல்லும் குரல்

யார் குரல்?

பெயர்: கோவிந்தராஜ்
வயது: 72

எண்:80, அப்துல் வஹாப் நகர், ரெட்டிபாளையம் சாலை, தஞ்சாவூர்; இங்குதான் கடந்த 50 ஆண்டுகளாக வீணை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் கோவிந்தராஜ். மரத்துண்டுகளும், வீணை களும் ஆக்கிரமித்தது போக எஞ்சியிருக்கும் சிறிய இடத்தில் மனைவி ருக்மணியுடன் வசித்து வருகிறார்!


அவரது வீட்டின் அளவை வைத்துச் சொன்னால் அவர் ஏழை! ஆனால்...





'என் மூத்த பொண்ணு காவல் துறை பணியில இருக்காங்க; அடுத்த பொண்ணு தனியார் பள்ளி அலுவலகப்பணியில இருக்குறாங்க. மகன் ஐ.டி.ஐ., படிச்சிருக்கார். பிள்ளைங்க மூணு பேருக்கும் திருமணம் ஆயிருச்சு. கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லாத வாழ்க்கை. இந்த வயசுல மூக்கு கண்ணாடி கூட தேவைப்படாத அளவுக்கு ஆரோக்கியமான உடல்; நான் ஏழையா?'

வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து பார்க்கும் வித்தை அறிந்த பெருமிதத்தோடு கேட்கிறார் கோவிந்தராஜ்!


உங்க வீணை சிலிர்க்கிற மாதிரி உங்களைப் பற்றி...





என் வீணையை வாங்கிட்டுப் போன ஒரு வித்வான், சில நுணுக்கமான குறைபாடுகளை சுட்டிக் காட்டினார். வீணையை மீட்டத் தெரியாத எனக்கு அந்த குறைகள் பிடிபடலை. வீணை வாசிக்க பயிற்சி எடுத்துக்கிட்டேன். வீணையோட நாதம் அவர் சொன்ன குறைகளை எனக்கு புரிய வைச்சது. குறைபாடில்லாம இன்னைக்கு நான் தயார் பண்ற ஒவ்வொரு வீணையும் நான் நேசிக்கிற அளவுக்கு என்னை நேசிக்கிறதா நம்புறேன்!

கோவிந்தராஜ் தனது பத்து வயதில் முழுநேரமாக வீணை தயாரிப்புக்குள் வந்தவர். 25 வயதில் சொந்தமாக தொழில் துவக்கி, நேர்த்தியாய் வீணை வடிவமைப்பதற்காக 70 வயதில் தமிழக அரசின் 'சிறந்த கைவினை கலைஞர்' விருது பெற்றவர்!

விருதுக்கான காரணம் - நீங்க சொல்லுங்கய்யா...





பொதுவா வீணையில தந்திகள் அமைஞ்சிருக்கிற மேளப்பகுதி மெழுகுல இருக்கும்; வெப்ப சூழல்ல மெழுகோட ஸ்திரம் குறையுறப்போ ஸ்ருதி பாதிக்கும்; இதை தவிர்க்க, மரத்துண்டுல மேளம் அமைச்சேன்; இது, விருதுக்கான காரணம். நான்கு வாரத்துல உருவாக வேண்டிய வீணை ஆறு வாரம் எடுத்துக்குறதுக்கும் இந்த பணிதான் காரணம்!

பார்ப்பதற்கு மிக எளிமையாக இருக்கும் கோவிந்தராஜ் அய்யாவின் மனதில் ஒரு வருத்தமும் ஏக்கமும்...





வருத்தம்: இசைக்கருவி தயாரிப்பாளர்களை இந்த சமூகம் இன்னும் முழுமையா பயன்படுத்தலை!

ஏக்கம்: இசைக்கருவிகளோட தயாரிப்பு முறை பற்றி விளக்கமா பள்ளி மாணவர்களோட பாடங்கள்ல இருந்திருந்தா, எங்க திறன் அவங்க மனசை பலப்படுத்த உதவியா இருந்திருக்குமே!

இந்த வருத்தமும், ஏக்கமும் தீர காலம் கனியட்டும்.

குறள் சொல்லும் குரல்



குறள்: 472


ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
பொருள்: தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை!

98948 84264

Advertisement