¹¹'எங்கள் மடத்தின் பல்லிகள்கூட பதி, பசு, பாசம் பற்றித்தான் பேசும்'

“எங்களுடைய தம்பிரான்கள், அடியவர்கள் மட்டுமின்றி, எங்களது மடத்தில் உள்ள பல்லிகள் கூட, பதி, பசு, பாசத்தை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கும்,” என, தருமபுரம் ஆதீனம் பேசினார்.

தருமபுரம் ஆதீனம், 27வது குருமகா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பேசியதாவது:

சைவ சித்தாந்த அனைத்துலக மாநாடு, 1984ம் ஆண்டு, 26வது மகா சந்நிதானத்தால் துவக்கப்பட்டது. ஐந்து இடங்களில் இந்த மாநாடு நடத்தப்பட்டு, தற்போது ஆறாவது மாநாடு நடக்கிறது. சைவ சித்தாந்தம் என்பது முடிந்த முடிவு.

எங்களுடைய தருமை ஆதீனத்தின் முனிபுங்கவர், கர்நாடகா மன்னரை சந்திக்க சென்றபோது, 'உங்கள் ஆதீனத்து அடியார்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்' என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதிலை கேட்டு, உடனடியாக அந்த மன்னர், 1,000 வேலி நிலம் எழுதி கொடுத்து, அந்தப்பணி தொடர வேண்டும் என்றார்.

எங்களுடைய தம்பிரான்கள், அடியவர்கள் மட்டுமின்றி, எங்களது மடத்தில் உள்ள பல்லிகள் கூட, பதி, பசு, பாசத்தை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கும். இதை, 'கவுலி உரைக்கும் பதி, பசு, பாசத்தின் உண்மைகளே' என்று, ஞானபிரகாச மாலை நுால் காட்டுகிறது.

இங்குள்ள, 18 ஆதீனங்களின் கொள்கை, சைவ சித்தாந்தத்தை பரப்புவது. இதற்கு, சிவபெருமான் துவங்கி, அகச்சந்தானம், புறச்சந்தானம் வழியாக வரும் ஆதீனங்கள் தான், இந்த 18 ஆதீனங்கள். அதில் மெய்கண்டாருக்கு பின் தோன்றிய 14 நுால்கள், சைவ சித்தாந்தத்தை காட்டுகின்றன.

இதற்கு மூலமாக இருப்பது பன்னிரு திருமுறைகள். இந்த மாநாட்டில், 75 நுால்கள் வெளியிடப்பட உள்ளன.

மேலும், 14 நாடுகளை சேர்ந்தவர்கள், மாநாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மாநாட்டின் மூன்றாம் நாள் நிறைவு விழாவில், 300 கட்டுரைகள் நான்கு தொகுதிகளாக வெளிவர உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement