இந்தியாவுடன் போரை ஆதரிக்காத பாக்., மக்கள் மவுலானா கேள்விக்கு மவுனமே பதில்

இந்தியாவுடன் போரில் ஈடுபட பாகிஸ்தான் மக்கள் இடையே, போதிய ஆதரவு இல்லை. இஸ்லாமாபாத் லால் மசூதியின் சர்ச்சைக்குரிய மதகுரு மவுலானா அப்துல் அஜிஸ் காஜி, 'இந்தியாவுடன் போர் நடந்தால், பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பீர்களா?' என்று மக்களிடம் கேட்டபோது, மவுனமே பதிலாக கிடைத்தது.
'எல்லா நாடுகளுக்கும் ஒரு ராணுவம் உண்டு. ஆனால், பாகிஸ்தான் ராணுவத்துக்கு, ஒரு நாடே இருக்கிறது' என சர்வதேச அளவில் ஒரு நகைச்சுவை உண்டு. அதை மெய்ப்பிக்கும் விதத்தில், பாகிஸ்தான் ராணுவம், நாட்டின் ஆட்சி அதிகாரம், நீதிமன்ற நிர்வாகம், ஐ.எஸ்.ஐ., எனும் உளவு அமைப்பு ஆகியவற்றை கையில் வைத்துள்ளது.
சர்வ வல்லமை பெற்றவராக இருக்கும் ராணுவ தளபதி அசிம் முனீர் எனும் முல்லா முனீர், பாகிஸ்தானை, 'பாகிஸ்தான் எமிரேட்' எனும், பழமைவாத மதவாத நாடாக மாற்ற திட்டமிட்டுள்ளார். இதற்காகவே இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக போருக்கு புறப்பட்டுள்ளது பாகிஸ்தான்.
மதகுரு எதிர்ப்பு
இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகளை அனுப்பி அப்பாவி மக்கள் 26 பேரை சுட்டுக்கொன்றதில், பாக்., ராணுவத்தின் பங்கு வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இந்தியாவுடன் போரிட்டால், அங்குள்ள மத குருக்களும், மக்களும் ஆதரவு தருவார்கள் என அசிம் முனீர் கருதுகிறார். ஆனால், மத தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மக்களும் போரை ஆதரிக்கவில்லை. பயங்கரவாத தலைவர்கள் சிலர் மட்டுமே, பாக்., ராணுவத்தின் செயலுக்கு பக்கவாத்தியம் வாசித்து வருகின்றனர்.
இந்தியாவுடனான போரை பாகிஸ்தான் மக்கள் ஆதரிக்கிறார்களா, எதிர்க்கிறார்களா என்பதை வெளிப்படுத்தும் ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இஸ்லாமாபாத் லால் மசூதியின் மதகுரு மவுலானா அப்துல் அஜிஸ் காஜி. இவர், 'இந்தியாவுடன் போர் நடந்தால், எங்களோடு (பாகிஸ்தானுடன்) நிற்பீர்களா?' என்று, அங்கிருந்த மக்களிடம் கேட்டார். ஆனால், மக்கள் இடையே எதிர்பாராத அமைதி காணப்பட்டது. யாரும் போரை ஆதரித்து கையை துாக்கவில்லை.
மோசமான நிர்வாகம்
பொறுமை இழந்த அந்த மதகுரு, ''உங்களிடம், எனக்கு ஒரு கேள்வி உள்ளது... சொல்லுங்கள். இந்தியாவுக்கு எதிராக, பாகிஸ்தான் போராடினால், உங்களில் எத்தனை பேர் பாகிஸ்தானை ஆதரித்து போராடுவீர்கள்?'' என மீண்டும் கேட்டார். ஆனால், யாரும் பதில் கூறவில்லை.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அப்துல் அஜிஸ் காஜி, ''பரவாயில்லை. உங்களிடம் போதுமான புரிதல் உள்ளது,'' என கூறிவிட்டு, பாக்., அரசையும், ராணுவத்தையும் பொரிந்து தள்ளினார்.
''இன்று பாகிஸ்தானில், நிர்வாகம் மிகவும் மோசமாக உள்ளது. அவநம்பிக்கை தான் நீடிக்கிறது.- ஒரு கொடூரமான, பயனற்ற நிர்வாக கட்டமைப்பு உள்ளது. இதற்கு இந்தியா கூட பரவாயில்லை. பலுசிஸ்தானில் என்ன நடக்கிறது? கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் என்ன நடக்கிறது? மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நடக்கின்றன. பாகிஸ்தான் தனது சொந்த குடிமக்கள் மீதே குண்டு வீசுகிறது. பலர் கொல்லப்பட்டுள்ளனர்,'' என, கோபத்தை கொட்டினார் மவுலானா.
இஸ்லாமாபாத் லால் மசூதி என்பது பழமைவாத மற்றும் பயங்கரவாத கருத்துக்களுக்கு உறைவிடமாக இருக்கும். மதகுருமார்கள் பலரும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களையே கூறி வந்தனர். ஆனால், தற்போது, பாகிஸ்தானில் நிலைமை மாறியுள்ளது. இது பாகிஸ்தான் ராணுவத்தின் எதேச்சதிகார நடவடிக்கையை மக்களும், மத பண்டிதர்களும் ஆதரிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. இந்தியா மீதான, பாக்., மக்களின் எண்ணமும் மாறி வருகிறது.
--நமது நிருபர்-





