காங்., பொதுக்கூட்டத்தை புறக்கணித்த தலைவர்கள் அகில இந்திய தலைமை அதிருப்தி

மதுரை : தமிழக காங்., சார்பில் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தை புறக்கணித்த தலைவர்கள் குறித்து அகில இந்திய தலைமை அதிருப்தியில் உள்ளது.

கட்சியின் அகில இந்திய தலைமை உத்தரவின்பேரில் அனைத்து மாநிலங்களிலும் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு குறித்த பொதுக்கூட்டம் நடத்த உத்தரவிட்டது. இதன்படி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அனைத்து தலைவர்கள், நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்தார். ஒவ்வொரு மாவட்ட தலைவரும் 500 தொண்டர்களை அழைத்துவரவும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் சென்னை தேனாம்பேட்டையில் நடந்த இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுவதாக அறிவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், எம்.பி.,க்கள் கார்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கோபிநாத் உட்பட பலர் பங்கேற்கவில்லை. இது கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: இக்கூட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் கட்டாயம் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட அளவிலும் இதே தலைப்பிலான கூட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அதிருப்தி காங்., தலைவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக காங்., கட்சி சொத்துக்கள் பாதுகாப்பு, மீட்பு குழுவை அமைத்து முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, அழகிரி, எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், கார்த்தி, ஜோதிமணி உள்ளிட்ட பலரையும் பொறுப்பாளர்களாக நியமித்து மாநில தலைவர் அறிவித்தார்.

கட்சி சொத்து பாதுகாப்பு குழுவில் இடம் பெற்ற பலர் டில்லி தலைமையிடம் தமிழக காங்., தலைவர் பதவியில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்தியவர்கள். ஆனாலும் அவர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டும் புறக்கணித்தனர். இதுகுறித்த தகவல் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்காதவர்கள் மீது சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளனர். விரைவில் இதுதொடர்பாக விளக்கம் கேட்கும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றனர்.

மீட்கப்பட்ட இடத்தில் நடந்த முதல் கூட்டம்

சென்னையில் காங்., பொதுக்கூட்டம் நடந்த தேனாம்பேட்டை பகுதி, முன்னாள் முதல்வர் காமராஜால் கட்சிக்கு வாங்கப்பட்டது. தனியார் வசம் இருந்த இந்த இடம் சமீபத்தில் தான் கட்சியால் மீட்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அந்த இடத்தின் நடுவில் பல ஏக்கர் பரப்பில் காலி கிரவுண்டும், அதை சுற்றி வணிக கடைகளும் செயல்படுகின்றன. தனியாரிடம் இருந்து மீட்கப்பட்ட அந்த இடத்தில் தான் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement