3 மகள்களுடன் தாய் தற்கொலை மூட நம்பிக்கையா என சந்தேகம்

மும்பை: மும்பையில் மூன்று மகள்களுடன் தாய் தற்கொலை செய்தார். மூட நம்பிக்கை காரணமாக இந்த சம்பவம் நடந்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை அருகே உள்ள பிவாண்டியை அடுத்த பெனே பகுதியைச் சேர்ந்தவர் லால்ஜி பன்வாரிலால் பார்தி; விசைத்தறி தொழிலாளி.

இவரது மனைவி புனிதா, 31. இவர்களுக்கு நந்தினி, 12, நேஹா, 7, அனு, 4, என மூன்று மகள்கள். விசைத்தறி தொழிலில் இரவு பணிக்காக லால்ஜி செல்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவுப் பணிக்கு சென்ற அவர், நேற்று காலை வீடு திரும்பினார்.

வீடு பூட்டப்பட்டிருந்ததால், வெகு நேரம் கதவை தட்டிப்பார்த்து விட்டு, பதில் இல்லாததால், ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். அப்போது, மனைவி மற்றும் மூன்று மகள்களும் சடலங்களாக துாக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து, தடயங்கள், சாட்சியங்களை சேகரித்தனர். மேலும், நான்கு உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூன்று குழந்தைகளையும் துாக்கில் போட்டு விட்டு, புனிதாவும் துாக்கில் தொங்கியதாக தெரிகிறது. வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது, ஒரு கடிதம் சிக்கியது. அதில், தற்கொலை முடிவுக்கு யாரும் காரணமில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், கைகளால் எழுதப்பட்டிருந்த வேறு சில குறிப்புகளையும், டைரியையும் அங்கிருந்து போலீசார் கைப்பற்றினர். அதில், போலீசாருக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் சிக்கின.

முழு குடும்பமும் ஒரு விதமான ஆன்மிக நெறிமுறைகளை பின்பற்றி வந்ததாக அதில் தெரிய வந்தது. எனவே, மூட நம்பிக்கையால், கூட்டாக தற்கொலை என்ற விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். லால்ஜியிடமும் அது பற்றி விசாரணை நடைபெறுகிறது.

Advertisement