கிரைம் செய்திகள்... விழுப்புரம்

பைக் திருட்டில் தேடப்பட்டவர் கைது



மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா மற்றும் போலீசார் நேற்று இளையாங்கன்னி கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அதில், பல்வேறு இடங்களில் பைக்குகள் திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த விரியூர் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஜான் கென்னடி, 28; என தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், அவர் அளித்த தகவலின் பேரில், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

7 சவரன் நகைகள் மாயம்



மணலுார்பேட்டை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 45; விவசாயி. இவர், நெக்லஸ், செயின் உள்ளிட்ட 7 சவரன் நகைகளை வீட்டில் சுவாமி படத்திற்கு பின்னால் வைத்திருந்தார்.

நிலம் வாங்குவதற்காக அடமானம் வைக்கலாம் என நேற்று காலை பார்த்தபோது நகைகளை காணவில்லை. புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

லாரி மோதி தனியார் ஊழியர் பலி



திருக்கோவிலுார் அடுத்த கோட்டமருதுாரைச் சேர்ந்தவர் லட்சுமிகாந்தன், 35; தனியார் நிறுவன ஊழியர். இவர் ராயல் என்பீல்ட் பைக்கில், நேற்று மாலை 4:30 மணிக்கு, திருக்கோவிலுாரில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தார். டி.அத்திப்பாக்கம், காட்டுகோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி, மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். மணலுார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்றவர் கைது



பெரியதச்சூர் சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார் ரெட்டணை, சங்கராபரணி ஆற்றின் கரையோரம் ரோந்து சென்றனர். அங்கு, விற்பனைக்காக 60 கிராம் கஞ்சா வைத்திருந்த ரெட்டணையைச் சேர்ந்த வெண்ணியப்பன் மகன் ராஜி, 19; என்பவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இளம்பெண் மாயம்



கச்சிராயபாளையம் அடுத்த தெங்கியாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவன் மகள் மகாலட்சுமி, 21; இவர் பிளஸ் 2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 1ம் தேதி மாலை 3:00 மணிக்கு, கள்ளக்குறிச்சிக்கு சென்று வருவதாக கூறி, சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

அங்கன்வாடி மையத்தில் திருட்டு



கோட்டக்குப்பம், தைக்கால் திடலில் உள்ள அங்கன்வாடி மைய அமைப்பாளர் சற்குணம் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு சென்றார். அப்போது அங்கன்வாடி மைய கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. சமையல் அறையில் இருந்த பொருட்கள் திருடு போகவில்லை. கோட்டக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாணவி மாயம்: போலீஸ் விசாரணை



விழுப்புரம் அடுத்த கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுகுமார் மகள் அபிநயா, 20; இவர், விழுப்புரம் அரசு கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 30ம் தேதி, வழக்கம் போல் கல்லுாரிக்குச் சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில் மோதி ஒருவர் பலி



விக்கிரவாண்டி அடுத்த பேரணி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 65; இவர், தனது மகனுடன் பேரணி ரயில்வே குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று மாலை 5:40 மணிக்கு, பேரணி ரயில்வே கேட்டை கடக்க முயன்றார். அப்போது குருவாயூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பெருமாள் இறந்தார். செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போலீசை மிரட்டிய 2 பேர் கைது



செஞ்சி அடுத்த காமகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் மகன் சந்தீப், 26; ஆட்டோ டிரைவர். மேல்பாப்பம்பாடி, எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் முனியன் மகன் சூர்யா, 27; நண்பர்கள். இருவரும் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு ஆட்டோவில் அதிக சத்தத்துடன் பாட்டு போட்டு டான்ஸ் ஆடினர். இதை தட்டிக்கேட்ட ஊராட்சி தலைவர் சக்தி, 41; மற்றும் கிராம பிரமுகர்களை தாக்கி தகராறு செய்தனர். தகவல் அறிந்து வந்த நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசாரையும் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சந்தீப், சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.

குட்கா விற்றவர் கைது



காணை சென்னகுணம் பகுதி பெட்டிக்கடையில் காணை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் நேற்று சோதனை செய்தனர். அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. உடன், அதே பகுதியைச் சேர்ந்த பெட்டிக் கடைக்காரர் சிவக்குமார், 65; என்பவரை கைது செய்து 5000 ரூபாய் மதிப்புள்ள 4 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மின்சாரம் தாக்கி மின் ஊழியர் காயம்



காணை மின்வாரிய அலுவலகத்தில் லைன் மேனாக பணிபுரிபவர் கனகசபை, 50; இவர், நேற்று மதியம் 2:00 மணிக்கு, காணை மெயின் ரோட்டில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கியது. இதில், அவரது கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டது. உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

2 குழந்தைகளுடன் பெண் மாயம்



மணலுார்பேட்டையைச் சேர்ந்தவர் அய்யனார், 40; இவரது மனைவி அஞ்சலை, 32; இவர்களுக்கு தமிழ்ச்செல்வன், 8; துர்கா தேவி, 5; என இரு பிள்ளைகள் உள்ளனர். தம்பதிக்கிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த, 1ம் தேதி மாலை 4:00 மணிக்கு தனது மகன் மற்றும் மகளுடன் வீட்டை விட்டு சென்ற அஞ்சலை வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement