‛‛ஆபரேஷன் சிந்துார்''-ல் பங்கேற்ற அச்சம் அறியா இந்திய சிங்கப் பெண்கள்!!

புதுடில்லி: பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ‛ஆபரேஷன் சிந்துார்' என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலில் நமது ராணுவ மற்றும் விமானப்படை பெண் வீராங்கனைகளும் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத முகாம்கள் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தி அவற்றை அழித்துள்ளது இந்தியா. இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைகள் ஈடுபட்டன. தாக்குதல் நடத்திய குழுக்களில் நமது நாட்டு பெண் வீராங்கனைகளும் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப் பெண்கள்
இதை உறுதிப்படுத்தும் விதமாக, ஆபரேஷன் சிந்துார் பற்றி ராணுவ அமைச்சகம் சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் 2 பெண் அதிகாரிகள் முக்கிய பங்கு வகித்தனர். ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரே அந்த வீராங்கனைகள்.
பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி என்று அவர்கள் இருவரும் விளக்கினர். இந்த தாக்குதலில் இவர்களின் பங்கு என்ன என்று நேரடியாக விளக்கப்படாவிட்டாலும், இவர்களும் தாக்குதலில் பங்கெடுத்ததாக கூறப்படுகிறது.
பெண் அதிகாரிகள் ஏன்?
இரண்டு பெண் அதிகாரிகளை வைத்து, தாக்குதல் பற்றி விளக்கப்பட்டதன் பின்னணியில் பல அர்த்தங்கள் இருக்கின்றன. பஹல்காம் தாக்குதலில் ஹிந்து ஆண்களாக பார்த்து பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
இதனால் பல ஹிந்து பெண்கள் கணவனை இழந்து சோகத்தில் ஆழ்ந்தனர். ஹிந்து மத வழக்கப்படி பெண்கள் நெற்றியில் திலகம் (சிந்துார்) இட்டுக்கொள்வது வழக்கம். பயங்கரவாதிகளின் கொடூர செயலால் இந்த ஹிந்து பெண்கள் திலகத்தை இழந்தனர்.
‛ஆபரேஷன் சிந்தூர்' வடிவமைப்பின் அர்த்தம் என்ன?
இந்த கொடுமைக்கு பதில் அளிக்கும் விதமாகவே தாக்குதலுக்கு ‛ஆபரேஷன் சிந்துார்' என பெயரிடப்பட்டது. மத்திய அரசு வெளியிட்ட ஆபரேஷன் சிந்தூர் என்ற வார்த்தையின் ஆங்கில எழுத்துகளில் "O" என்ற எழுத்து குங்கும டப்பா வடிவத்திலும், அந்த டப்பாவிலிருந்து குங்குமம் சிதறி கிடப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது பஹல்காமில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிக்கு கணவர்களை இழந்த ஹிந்து பெண்கள் நெற்றி குங்குமத்தை இழந்ததை குறிக்கிறது. அது மட்டுமல்லாமல், பேடித்தனமாக பெண்களை விதவைகளாக்கிய பயங்கரவாதிகள் மீது அச்சம் என்பதை அறியாத எங்கள் நாட்டு பெண்கள் தாக்குவார்கள் என்பதையும் இந்தியா காட்டி உள்ளது. இதை உணர்த்தும் விதமாகவே தாக்குதலில் வீராங்கனைகள் ஈடுபடுத்தப்பட்டனர். பெண்களை வைத்தே தாக்குதல் பற்றியும் விளக்கப்பட்டது.
சோபியா குரோஷி, ராணுவ கர்னல்
இவர் குஜராத்தைச் சேர்ந்தவர். முதுகலை பட்டம் பெற்றவர். ராணுவக் குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர். தற்போது கர்னல் அதிகாரியாக ராணுவத்தில் உள்ளார். அவரின் தாத்தா பிரிட்டிஷ் கால இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். தந்தையும் ராணுவத்தில் சேவை புரிந்துள்ளார்.
ராணுவ குடும்பம் என்பதால் குழந்தை பருவத்தில் இருந்தே இவரைச் சுற்றி ராணுவக் காற்றை சுவாசித்தவர் எனலாம். 1999ம் ஆண்டு ராணுவத்தில் அதிகாரியாக சேர்ந்தவர். படிப்படியான முன்னேற்றங்களுக்கு பின்னர் தற்போது ராணுவ தகவல் தொழில்நுட்ப படைப்பிரிவின் கர்னலாக இருக்கிறார்.
2006 காங்கோவில் ஐ.நா., அமைதி காக்கும் பணியில் செயலாற்றியவர். பஞ்சாப் எல்லையில் பராக்ராம் ஆபரேஷனில் இடம்பெற்றவர். வட கிழக்கு மாநிலங்களில் வெள்ளத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகளில் களம் இறங்கி அனைவர் கவனம் பெற்றவர்.
2016ம் ஆண்டு சர்வதேச ராணுவ பயிற்சியின் போது உலகம் முழுவதும் மொத்தம் 18 படைப்பிரிவுகள் பங்கேற்றன. அதில் இந்தியாவின் படைப்பிரிவை வழிநடத்திய ஒரே பெண் அதிகாரி என்ற பெயரை கொண்டவர்.
வியோமிகா சிங், விங் கமாண்டர்!
2004ம் ஆண்டு டிசம்பர் 18ல் இந்திய விமானப்படையில் சேர்ந்தவர். அதன் பின்னர் பைலட்டாக பயிற்சி பெற்றார். ஹெலிகாப்டர்களை இயக்குவதில் வல்லமையுடன் செயல்பட்டதாக பாராட்டுகளை பெற்றவர்.
மீட்புப் பணிகள், பேரிடர் தருணங்கள் மற்றும் மற்ற முக்கிய ஆபரேஷன்களில் ஹெலிகாட்பர்களை திறமையாக இயக்கி அனைவர் கவனத்தையும் கவர்ந்தவர்.
13 ஆண்டு குறுகிய கால பணியிலேயே 2017ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி விங் கமாண்டராக பதவி உயர்வு பெற்றார். இந்திய விமான படையில் பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்பதன் அடையாளமாக இருப்பவர் வியோமிகா சிங்.










மேலும்
-
ஹனுமன் வழியில் தாக்குதல் -ராஜ்நாத் சிங் பெருமிதம்
-
மனித - விலங்கு மோதலை தடுக்க ஏ.ஐ., உதவியுடன் திட்டம்: கூடலுாரில் வனத்துறை அமல்
-
சென்னை - பெங்களூரு, ஹைதராபாத் 160 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கம்
-
கலைக்கல்லுாரி பட்டமளிப்பு விழா
-
இடுக்கியில் தெரு நாய்கள் அதிகரிப்பு 4 மாதங்களில் 2525 பேர் பாதிப்பு
-
ஆவின் பாலகங்களில் மோர் தட்டுப்பாடு வரவேற்பு இருந்தும் கிடைக்காத அவலம்