கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் நாகை மீனவர்கள் 20 பேர் 'அட்மிட்'

1

நாகப்பட்டினம்: இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில், நாகையில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்கள் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டையை சேர்ந்த ஆனந்த், 37, என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், ஏப்., 1ல், ஐந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

அதேபோன்று, வெள்ளப்பள்ளம், நாகரத்தினம், 40, என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், ஏப்., 2ல், ஐந்து மீனவர்களும், செருதுாரை சேர்ந்த சக்திவேல், 33, என்பவரது பைபர் படகில் நான்கு மீனவர்களும், மாணிக்கவேல், 35, என்பவருக்கு சொந்தமான படகில், ஆறு மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு, கோடியக்கரைக்கு தென்கிழக்கே தமிழக கடல் பகுதியில், பல பிரிவுகளாக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட இரு பைபர் படகுகளில், இலங்கையை சேர்ந்த ஆறு பேர் வந்தனர்.

ஆங்காங்கே தனித்தனியாக மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை இரும்புக் கம்பிகளால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில், பல மீனவர்களுக்கு மண்டை உடைந்தது. கடற்கொள்ளையர்கள், மொபைல் போன்கள், ஜி.பி.எஸ்., கருவிகள் ஐஸ் பெட்டிகள் மற்றும் பிடிக்கப்பட்ட மீன்களை தங்கள் படகுகளில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

தாக்குதலில், 20 மீனவர்கள் காயமடைந்தனர். நேற்று காலை கரை திரும்பிய அவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

மீனவர்கள் கூறுகையில், 'தடைக்காலம் என்பதால், விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை உள்ளது. பைபர் படகுகள் மட்டுமே மீன்பிடிக்க அனுமதி. ஆழ்கடல் பரப்பில், இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் உள்ளனர்.

'இந்த பாதுகாப்புகளை மீறி, இலங்கை கடற்கொள்ளையர்கள், நம் கடல் எல்லைக்குள் அத்துமீறி வந்து தாக்கி வருகின்றனர்' என்றனர்.

Advertisement