பழிவாங்க வழக்கு தொடுத்த ரவுடி; ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது நீதிமன்றம்!

1


மதுரை: சட்டவிரோத குவாரி நடந்ததாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரியும் பழிவாங்கும் நோக்கில் வழக்கு தாக்கல் செய்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரவுடிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது.


கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்பர்ஜன் சாமுவேல் தாக்கல் செய்த மனு: தோவாளை அருகே ஈசாந்தி மங்கலத்தில் அமைந்துள்ள ஒரு கல்வி அறக்கட்டளையின் தலைவராக உள்ளேன். அறக்கட்டளைக்கு சொந்தமாக குறிப்பிட்ட சர்வே எண்ணில் நிலம் உள்ளது.

அருகிலுள்ள நில உரிமையாளர் எட்வர்ட் தாஸ் சட்டவிரோதமாக செங்கல் சூளை நடத்துகிறார். எனது நிலத்திலிருந்து சட்டவிரோதமாக மணலை அள்ளி, பனை மரங்களை அகற்றியுள்ளார். கேள்வி எழுப்பினேன்.

எனக்கு எதிராக 2024 ல் போலீசார் பொய் வழக்கு பதிந்தனர். கலெக்டருக்கு புகார் அனுப்பினேன். நடவடிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், நாகர்கோவில் டி.எஸ்.பி.,க்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.



அரசு தரப்பு: மனுதாரர் சமர்ப்பித்துள்ள போட்டோக்கள் சிரமடம் கிராமத்தின் சர்வே எண்கள் தொடர்புடையவை. ஜோசப் என்பவர் ஈசாந்திமங்கலத்தில் செங்கல் சூளை நடத்துகிறார்.


அவர் சிரமடத்திலுள்ள தனது நிலத்தில் செங்கல் சூளைக்காக மண் அள்ள உரிமம் பெற்றுள்ளார். மனுதாரரின் நிலம் ஈசாந்திமங்கலத்தில் உள்ளது. குவாரி அனுமதி பெற்ற நிலம் சிரமடத்தில் உள்ளது.


மனுதாரர் குறிப்பிடும் சர்வே எண்களை கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்நிலம் ஸ்பர்ஜன் சாமுவேல் பெயரில் உள்ளது. அங்கு எந்த குவாரி நடவடிக்கைகளும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.


மனுதாரர் பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடி. குண்டர் சட்டத்தின் கீழ் 2021 ல் கைது செய்யப்பட்டவர்.


ஒரு குவாரி நடத்தும் எட்வர்ட் ராஜாவை மிரட்டிய மனுதாரர், 'பிரச்னை இன்றி தொழில் நடத்த வேண்டுமெனில் ரூ.20 லட்சம் வேண்டும்,' என கேட்டுள்ளார். எட்வர்டு ராஜா பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். 2024ல் வழக்கு பதிந்தனர். மனுதாரர் கைது செய்யப்பட்டார்.இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதி: மனுதாரர் ஒரு ரவுடி. அவர் மீது மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. அருகிலுள்ள நில உரிமையாளர்களான எட்வர்ட் ராஜா மற்றும் தாஸ் ஈசாந்திமங்கலத்திலுள்ள தனது நிலத்திலிருந்து சட்ட விரோதமாக கனிமவளத்தை வெட்டி எடுத்துள்ளனர் என மனுதாரர் புகார் அளித்துள்ளார். அங்கு எந்த குவாரி நடவடிக்கையும் இல்லை என கனிம வளத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.



தனக்கு எதிராக போலீசில் புகார் அளித்த எட்வர்டு ராஜாவை அச்சுறுத்த அல்லது பழிவாங்கும் வகையில் மனுதாரர் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார் அனுப்பியுள்ளார். இம்மனு ஏற்புடையதல்ல; தள்ளுபடி செய்யப்படுகிறது. பழிவாங்கும் நோக்கில் பொறுப்பற்ற முறையில் இம்மனுவை தாக்கல் செய்த மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. மனுதாரர் ஒரு கல்வி அறக்கட்டளையை நடத்துவதாக கூறுகிறார்.


அவர் கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அபராத தொகையை செலுத்த வேண்டும். அதை அவர் மாவட்டத்தில் தொலைதுார கிராமத்திலுள்ள பள்ளிகளின் நலனிற்காக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement