முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு: தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் பாதுகாப்பை உறுதி செய்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியிருப்பதும், அவருக்குப் பாதுகாப்பின்மை இருப்பதுமான செய்திகள் அதிர்ச்சியை அளிக்கின்றன. சகாயம் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியராக பணியாற்றியபோது மாநிலத் தொழில் துறையின் முதன்மைச் செயலருக்கு எழுதிய கடிதத்தின் வழியே, 2012ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி மிகப்பெரிய கிரானைட் ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.
கருங்கல் (கிரானைட்) மற்றும் கனிம மணற்கொள்ளை பற்றி விசாரிக்க சகாயம் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று உத்தரவிட்டது. சகாயம் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதமே தன்னைக் கொலை செய்யப் போவதாக மிரட்டல்கள் வருவது குறித்துத் தமிழ்நாடு தலைமைச் செயலாளரைச் சந்தித்து முறையிட்டார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதைக் கருத்தில் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு ஆயுதமேந்திய தனிப்படையைப் பாதுகாப்புக்காக அளித்திருந்தது. திமுக அரசு 2023ஆம் ஆண்டு மே மாதம் இதனைத் தன்னிச்சையாகத் திரும்ப பெற்றுக் கொண்டது ஏனென்று புரியவில்லை. திமுகவை ஆதரித்து வலையொளி நடத்தி அண்டிப் பிழைக்கும் பிழைப்புவாதிகளுக்கெல்லாம் துப்பாக்கி ஏந்திய காவலர்களது பாதுகாப்பினைக் கொடுத்திருக்கும் மாநில அரசு, சகாயம் போன்ற உயரிய ஆளுமைகளைக் கைவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
2014ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட விசாரணைக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்வது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதத்தில் நீதிமன்ற அழைப்பாணை வந்த நிலையில், அண்மைக்கால அச்சுறுத்தல்களின் காரணமாகவே நேரில் செல்ல மறுத்திருக்கிறார் சகாயம். வளக்கொள்ளையை தடுக்கப் போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி, நெல்லையைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாகிர் உசேன் போன்றவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களைக் கண்ட பிறகே, விசாரணைக்குழுவின் பதிலைத் தாக்கல் செய்வதற்கு சகாயம் தயக்கம் காட்டியிருக்கிறார். அவருக்கானப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும்.
வளக்கொள்ளைகளைத் தடுத்து இயற்கை வளங்களைக் காக்க வக்கற்ற திமுக அரசு, அதற்கெதிராகக் களத்தில் நிற்கும் சூழலியல் ஆர்வலர்களது பாதுகாப்பினைக்கூட உறுதிப்படுத்த முடியாத இழிநிலையில் இருப்பது வெட்கக்கேடானது. தன்னுடைய பணியையும் ஒழுங்குடன் செய்யாமல், செய்பவர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யாமல், அடிப்படை ஆட்சித்திறன்கூட இன்றி செயல்படும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீர்கெட்டிருக்கிறது என்பதற்கு இதுவே சரிநிகர் சான்றாகும். மக்களுக்கான பெரும் பணிகளைத் தொடரவும், வளக்கொள்ளைக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடவும் சகாயத்திற்கு தமிழர்கள் நாங்கள் உறுதுணையாகவும், பாதுகாப்பு அரணாகவும் எப்போதும் உடன் நிற்போம் என இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகாயம் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவருக்கு சிறப்புப்பாதுகாப்பை உடனடியாக வழங்குவதோடு, வளக்கொள்ளைக்கு எதிரான அவரது சட்டப்பூர்வ செயல்பாடுகளுக்கு அரசு முழுமையாகத் துணைநிற்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.