இஸ்ரேல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்

டெல் அவிவ், மே 5--

இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தின் மீது, ஹவுதி பயங்கரவாத படை ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு, ஏழு மடங்கு பதிலடி தரப்படும் என, இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போர், ஓராண்டை கடந்தும் நீடித்தது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட வழிவகுத்தார்.

போர் நிறுத்தத்திற்கான கெடு நிறைவடைந்ததால், இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் மீண்டும் தாக்குதலை துவக்கியது. இதுவரை, 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு பதிலடி தரும் வகையில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவான ஹவுதி பயங்கரவாத படையினர், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென்குரியன் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து, நேற்று ஏமனிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

பயங்கர சத்தத்துடன் அப்பகுதியில் தீப்பிழம்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளிலும் அபாய சங்கு ஒலித்து, மக்கள் உஷார் படுத்தப்பட்டனர்.

இதன் காரணமாக விமான நிலையத்தில் இருந்த பயணியர் அதிர்ச்சி அடைந்து, அலறியடித்து ஓடினர். அனைத்து வாயிற்கதவுகளும் மூடப்பட்ட நிலையில், விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிமாக நிறுத்தப்பட்டன. இதேபோல், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உடனே நிறுத்தப்பட்டது. சில மணி நேரங்களுக்கு பின் இயல்புநிலை திரும்பியது.

ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை, இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தனர். விமான நிலைய வளாகத்தில் உள்ள பார்க்கிங் பகுதிகள் சேதமடைந்தது தெரியவந்தது. இத்தாக்குதலில், நான்கு பேர் லேசான காயமடைந்தனர்.

இதற்கிடையே ஹவுதி பயங்கரவாத அமைப்பின் செய்தித்தொடர்பாளர் யாக்யா சாரி, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், இஸ்ரேல் விமான நிலையத்தில் ஹவுதி அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தினார்.

ஹவுதி அமைப்பினரின் இத்தாக்குதல் பற்றி இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறுகையில், “எங்கள் நாட்டிற்கு யார் தீங்கு இழைக்கின்றனரோ, அவர்களுக்கு நாங்கள் ஏழு மடங்கு தீங்கு விளைவிப்போம்,” என்றார்.

ஹவுதி அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து, காசாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, இஸ்ரேல் அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்காக, சிறப்பு அமைச்சரவை கூட்டத்திற்கும் இஸ்ரேல் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதேபோல், காசாவில் போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கில், ஆயிரக்கணக்கான வீரர்களை தயார்நிலையில் இருக்கும்படி இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, இந்தியாவிலிருந்து, டெல் அவிவ் நகருக்கு இயக்கப்படும் விமானங்களின் சேவையை, ஏர் இந்தியா நிறுவனம், இரண்டு நாட்களுக்கு ரத்து செய்துள்ளது.

Advertisement