விமானப்படை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடில்லி, மே 5-
எல்லையில் போர் பதற்றம் நிலவும் சூழலில், விமானப்படை தலைமை தளபதி அமர் பிரீத் சிங், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதில், நம் முப்படைகளுக்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் அளித்துள்ளார். இந்நிலையில், நம் முப்படைகளின் தலைமை தளபதிகளை கடந்த வாரம் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுஹான் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பை தொடர்ந்து, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி மற்றும் கடற்படை தலைமை தளபதி தினேஷ் கே.திரிபாதி ஆகியோர் கடந்த இரு தினங்களில் பிரதமரை தனித்தனியாக சந்தித்தனர். அப்போது, நம் ராணுவம் மற்றும் கடற்படையின் தயார்நிலை, அத்துடன் தற்போதைய கள நிலவரம் குறித்து அவர்கள் விரிவாக விவரித்ததாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, விமான படையின் தலைமை தளபதி அமர் பிரீத் சிங், பிரதமர் மோடியை டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு, 45 நிமிடங்கள் நீடித்தது.
இதற்கிடையே, பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள ராணுவ கன்டோன்மென்ட் மற்றும் விமானப்படை தளத்தின் புகைப்படங்கள் மற்றும் இதர தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு வழங்கி வந்த இருவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதுதொடர்பாக, அமிர்தசரசைச் சேர்ந்த பாலக் ஷெர் மாசிஹ், சுராஜ் மாசிஹ் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.