தென்னை சாகுபடி நேரடி விற்பனையில் நிறைவான லாபம்!

தஞ்சை மாவட்டம், மருங்குளம் கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி விநாயகமூர்த்தி:

இது என் சொந்த ஊர். ஐ.டி.ஐ.,யில், 'ஏசி' மெக்கானிக் சான்றிதழ் படிப்பு முடித்துவிட்டு, சவுதி அரேபியா சென்று பல ஆண்டுகள் வேலை பார்த்தேன். என்னதான் கைநிறைய ஊதியம் கிடைத்தாலும், ஒரு கட்டத்தில் அந்த வாழ்க்கை முறையும், பணிச்சூழலும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.

அதனால், ஏழு ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்கு திரும்பி, நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். முதல் கட்டமாக, 2 ஏக்கரில் தென்னை சாகுபடியை துவங்கினேன்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பக்கத்தில் உள்ள வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், 150 தென்னங்கன்றுகளும், செவ்விளநீர் ரகத்தில், 50 கன்றுகளும் வாங்கி நடவு செய்தேன்.

மாட்டு எரு, ஆட்டு எரு, நெல் உமி சாம்பல் இந்த மூன்றும் கலந்து ஒரு மரத்துக்கு 15 கிலோ வீதம் வைத்து வருகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக மகசூல் கிடைக்கிறது. இரு மாதங்களுக்கு ஒருமுறை தேங்காய் பறிப்பேன். ஒரு பறிப்புக்கு சராசரியாக 5,000 காய்கள் கிடைக்கும்.

செவ்விளநீர் மரங்களில் இருந்து மாதம் ஒருமுறை சராசரியாக 500 காய்கள் கிடைக்கும். தேங்காய் மற்றும் இளநீரை ஆரம்பத்தில் வியாபாரிகளிடம் தான் விற்பனை செய்தேன். ஆனால், உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்கவில்லை.

அதனால், தஞ்சையில் உள்ள நாஞ்சிக்கோட்டை சாலையில் உழவர் சந்தையில் நேரடியாக மக்களிடமே, காலை 7:00 முதல் மதியம் 1:00 வரை விற்பனை செய்கிறேன். இங்கு, வாடகை கிடையாது.

தேங்காய் ஒன்றுக்கு 30 ரூபாயும்; இளநீருக்கு சராசரியாக 40 ரூபாயும் கிடைக்கிறது. ஆண்டுக்கு ஆறு முறை தேங்காய் அறுவடை வாயிலாக, மொத்தம் 30,000 காய்கள் கிடைக்கின்றன.

இதன் விற்பனை வாயிலாக, 9 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. 50 செவ்விளநீர் மரங்களில் மாதம் 500 காய்கள் வீதம் ஆண்டுக்கு 6,000 காய்கள் அறுவடை செய்கிறேன். இதன் விற்பனையில் இருந்து 2.40 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆக, தேங்காய் மற்றும் இளநீர் விற்பனையில் ஆண்டுக்கு 11.40 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

ஆறு மாதத்துக்கு ஒருமுறை இயற்கை உரங்கள், அறுவடை கூலி, போக்குவரத்து உள்ளிட்ட செலவு; இரண்டு மாதத்துக்கு ஒருமுறை மினி டிராக்டர் வாயிலாக உழவு உள்ளிட்ட செலவுகளை கணக்கிட்டால், ஒரு காய்க்கு உற்பத்தி செலவு, 9 ரூபாய். இளநீருக்கும் அதே செலவு தான். மொத்தம், 3.24 லட்சம் ரூபாய் செலவு போக, 8.16 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.

தொடர்புக்கு:

83441 45145

Advertisement