அலைச்சறுக்கில் அசத்தும் நடிகை பூமிகா ஷெட்டி

கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகை பூமிகா ஷெட்டி, 27. கன்னடத்தில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். கன்னட பிக்பாஸ் 7வது சீசனில் பங்கேற்று ரசிகர்கள் ஆதரவை பெற்றவர். நடிப்பு மட்டுமின்றி அலைச்சறுக்கு விளையாட்டில் அசத்தி வருகிறார்.

இதுபற்றி பூமிகா ஷெட்டி கூறியதாவது:

எனது சொந்த ஊர் உடுப்பியின் குந்தாபுரா. சிறு வயதில் இருந்தே கடலுக்குள் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போது எல்லாம் பெற்றோருடன் சென்று விடுவேன். கடலில் அலை சறுக்கு விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்று, நீண்ட நாட்களாக ஆசை இருந்தது.

முல்கியில் உள்ள அலைச்சறுக்கு பயிற்சி மையத்தில், கடந்த சில மாதங்களாக பயிற்சி எடுத்தேன். முதல் முறை சர்பிங் செய்த போது பெரிய அலையை எதிர்கொண்டேன். சர்பிங் பலகையில் இருந்து கடலுக்குள் விழுந்தேன். நிறைய உப்பு தண்ணீரை குடித்து விட்டேன். அவ்வளவு தான் நாம் முடிந்து விட்டோம் என்று நினைத்தேன். நல்ல வேளையாக எதுவும் நடக்கவில்லை.

பின், தொடர்ந்து பயிற்சி செய்து, தற்போது அலைச்சறுக்கில் சிறப்பாக செயல்படுகிறேன். கடல் நமக்கு நிறைய பாடங்களை கற்று கொடுக்கிறது. அலைச்சறுக்கு விளையாட்டு கொஞ்சம், ரிஸ்க் தான் என்றாலும் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி, எங்கும் கிடைப்பது இல்லை. எனக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் சச்சின் நாயக்கிற்கு நன்றி சொல்கிறேன்.

அவர் எப்போதும் தனது மாணவர்களை ஊக்குவித்து கொண்டே இருப்பார்.

அவரது கற்பித்தல் பாணி மிகவும் எளிமையாகவும், ஊக்குவிக்கும் வகையிலும் இருக்கும். எனக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம், உடுப்பி கடற்கரைகளில் அலை சறுக்கில் ஈடுபடுகிறேன்.

பைக் ஓட்டுவதிலும் எனக்கு ஆர்வம் அதிகம். பைக்கை எடுத்து கொண்டு நீண்ட துார பயணம் செய்வதை அதிகம் நேசிக்கிறேன். வாழ்க்கையில் ஏதாவது சாகசம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.


இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் -.

Advertisement