மரத்தின் அடியில் உருவான 'கதாலயா'

இன்றைய குழந்தைகள் மொபைல் போனில் யுடியூப் சேனில் கார்ட்டூன்கள் பார்த்து வளர்கின்றனர். ஆனால், 25 ஆண்டுகளாக 'கதை சொல்லுதல்' மூலம், நாட்டின் 27 மாநிலங்களிலும், உலகில் 48 நாடுகளிலும் கதை சொல்லும் கலை பயிற்சி அளித்து வருகிறார்.

நாட்டில் கதை சொல்லும் இயக்கத்தின் முன்னோடியான கீதாவுக்கு, முதலில் கதை சொல்லும் எண்ணம் இல்லை. சென்னையில், கல்வி பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்ற அவர், பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

அவரின் விதி, கதை சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். இன்று அவர், சர்வதேச அளவில் புகழ் பெற்ற கதை சொல்லி, கல்வியாளர், உலகளவில் கதை சொல்லும் அங்கீகரிக்கப்பட்ட, 'கதை சொல்லல் சர்வதேச அகாடமி' நிறுவனராக திகழ்கிறார்.

அவரது கதைகள், அன்பு தோழியிடம் இருந்து அரவணைப்பை பெறுவது போன்றிருக்கும். 1998ல் 'கதாலயா அறக்கட்டளை எனும் கதைகளின் வீடு' நிறுவனத்தை துவங்கினார்.

கல்வியில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துதல் என்பது தான் கதாலயாவின் தொலைநோக்கு பார்வை. இது விரைவில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு சாரா நிறுவனங்கள், பள்ளிகள், பெரு நிறுவனங்கள், நிபுணர்களுக்கு உதவும் வகையில் விரிவடைந்தது. 2003ல் கதாலயா நிறுவனம், உலகளவில் பரவ துவங்கியது.

கதை சொல்லுதலை தொழிலாக மாற்ற, அந்தாண்டு அமெரிக்காவுடன் இணைந்து 'சர்வதேச கதை சொல்லுதல் வகுப்புகள் அகாடமி'யை துவக்கினார். டிப்ளமோ கோர்ஸ்கள் துவக்கப்பட்டு, ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இதுபோன்று ஸ்வீடன், ஸ்காட்லாண்ட் நாடும் ஆதரவு கரம் நீட்டியது. இதுவரை கதை சொல்லுதல் கலையில் உலகம் முழுதும், 99,400 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.

இது துவிர, நாடு முழுதும் 20 இடங்களில், 'விண்வெளி கதை மையம்' அமைத்து உள்ளார். கதை சொல்லலை நாடு முழுதும் கொண்டு செல்ல, கதாலயாவுடன் 220 அரசு சாரா நிறுவனங்கள், 1,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இணைந்து செயல்படுகின்றன.

கடந்த 2005ல் முதல் சர்வதேச கதை சொல்லல் விழாவை கதாலயா ஏற்பாடு செய்தது. அதன் பின் பல விழாக்கள் நடத்தி வருகிறது. மிக குறைந்த நேரத்தில், கதை சொல்லல் என்ற கருத்து, மிகவும் முக்கியமானது ஆகிவிட்டது.

அத்துடன், 2023ல் பிரதமர் நரேந்திர மோடியின் மன் கீ பாத் எனும் மனதின் குரல் மூலம், கதாலயாவின் செயல்பாடு, கீதா ராமானுஜத்தின் பணி குறித்து பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது. கதை சொல்லலில் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பல விருதுகளை கீதா ராமானுஜம் பெற்றுள்ளார்.

தனக்குள்ள ஆர்வம் குறித்து கீதா ராமானுஜம் கூறியதாவது:

எதுவும் தானாக நடந்து விடாது. திடீரென ஒன்றை செய்யும் போது, நம் உடலும், மனமும், 'இது தான் என் ஆசை' என்று சொல்லும். அது தான் எனக்கும் நடந்திருக்கிறது.

என் வாழ்க்கையில் பெரிய லட்சியங்கள் எதுவும் இல்லை. நான் ஒரு பள்ளியில் வரலாற்று ஆசிரியையாக பணியாற்றி வந்தேன். அங்கு நான் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி கொண்டிருந்தேன். நான் சொல்லும் கதைகளால், அவர்கள் பாடங்களில் ஆர்வம் காட்டுவர். நான் அவர்களை வகுப்பறையில் இருந்து வெளியே அழைத்து சென்று, பாடம் நடத்துவேன்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பள்ளி நிர்வாகம், என்னை நுாலக ஆசிரியராக்கினர். மனமுடைந்து வேலையை ராஜினாமா செய்ய விரும்பினேன். ஆனாலும், 'எதற்கும் எதிர்வினையாற்றாதே. அனைத்தும் ஒரு காரணத்துக்காகவே நடக்கும்' என்று என் தந்தை சொல்லியது நினைவுக்கு வந்தது.

இதனால் நுாலக ஆசிரியர் பணியை ஏற்றுக் கொண்டேன். நுாலகத்துக்கு வரும் குழந்தைகள் படிப்பதில்லை என்பதை உணர்ந்தேன். அவர்களுக்கு நாம் ஏன் கதை சொல்லக்கூடாது என்று தோன்றியது.

இங்கு வரும் குழந்தைகளுக்கு அங்குள்ள புத்தகங்களில் இருந்து கதைகளை சொல்ல ஆரம்பித்தேன். ஒரு கதையை படித்து கொண்டிருக்கும் போது, மணி அடித்துவிடும். குழந்தைகளோ, கதையை முடிக்க சொல்லி என்னிடம் கெஞ்சுவர். அவர்களிடம் புத்தகத்தை கொடுத்து, நீங்களே படித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவேன்.

அவர்களும் புத்தகத்தை ஆர்வமுடன் படிப்பர். இது குழந்தைகளை படிக்க வைக்க சிறந்த வழி என்பதை உணர்ந்தேன். இதனால் நுாலகத்துக்கு குழந்தைகள் வரும் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரு நாள் மழை நேரத்தில், நானும், இரு ஆசிரியைகளும் ஆலமரத்தின் கீழ் கூடி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது மாணவர்கள் பாடங்களை ஆர்வமுடன் படிக்கும் பழக்கத்தை கொண்டு வருவது குறித்து விவாதித்தோம்.

கல்வியில் உள்ள கருத்துகளை, மாணவர்களுக்கு எவ்வாறு சுவாரஸ்யமாக்குவது; பாடங்களில் மாணவர்கள் ஆர்வமுடன் படிக்கவும் எவ்வாறு ஊக்குவிப்பது என்று ஆலோசித்தோம்.

அப்போது தான், நுாலகத்தில் மாணவர்களுக்கு கதை சொல்லுதலால், குழந்தைகள் உற்சாகமடைந்தது நினைவுக்கு வந்தது. அது குறித்து பேசியபோது, மற்ற ஆசிரியைகளும் ஒப்புக் கொண்டனர்.

கடந்த 1996ல் கதை சொல்லல் என்ற ஒரு வார பயிற்சி முகாம் நடத்தினோம். அதில் பங்கேற்ற ஆங்கில நாளிதழ் நிருபர், என் கதை சொல்லுதல் குறித்து, மறுநாள் நாளிதழில் விரிவாக விவரித்திருந்தார்.

அன்றைய தினம், எனக்கு வந்த தொலைபேசியில் பேசிய நபர், '300 ஆசிரியர்களுக்கு கதை சொல்லும் கலையில் பயிற்சி அளிக்க வேண்டும்' என்று கூறினார். அன்று துவங்கிய என் 'கதை சொல்லல்' பணி இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் விபரங்களுக்கு 82773 89840, 63645 59840 என் மொபைல் போன் எண்ணிலும், kathalaya@gmail.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

- நமது நிருபர் -

Advertisement