அதிக ' சீட்'டு்க்கு ஆசைப்படும் திருமாவுக்கு தி.மு.க., செக்! : பா.ம.க.,வை கூட்டணிக்குள் கொண்டு வர ரகசிய பேச்சு; சித்திரை முழு நிலவு மாநாட்டில் வருகிறது திருப்பம்

2


அதிக, 'சீட்' கேட்கும் திருமாவளவனுக்கு, 'செக்' வைக்கும் வகையில், பா.ம.க.,வை கூட்டணிக்கு இழுக்க, தி.மு.க., திடீர் முயற்சி மேற்கொண்டுள்ளது. மாமல்லபுரத்தில் நடக்கும் சித்திரை முழுநிலவு மாநாட்டில், இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என, பா.ம.க., வட்டாரத்தில் பேசப்படுகிறது.



லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க.,வுக்கு, எதிர்பார்த்த எந்த வெற்றியும் கைகூடவில்லை. அதிருப்தி அடைந்த அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு, பா.ஜ., உறவை தொடர்வதில் விருப்பமில்லை. வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைந்து மறுபடியும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக இருக்கிறது. அதேநேரத்தில், அவரது மகனும், பா.ம.க., செயல் தலைவருமான அன்புமணிக்கு, அதில் ஆர்வம் இல்லை; தே.ஜ., கூட்டணியில் நீடிப்பதே நல்லது என, சொல்லி வருகிறார்.

ஈர்க்க முடிவு



அதிலும், அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் ஓரணிக்கு வந்துள்ள நிலையில், அதுவே வலுவானதாகவும், சிறந்ததாகவும் இருக்கும் என, ராமதாசிடம் கூறி வருவதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பதற்கு முன், சித்திரை முழுநிலவு மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி, தி.மு.க., - அ.தி.மு.க., தலைமைகளின் பார்வையை தங்கள் பக்கம் ஈர்க்கும் முடிவுக்கு, இருவரும் வந்துள்ளனர்.



அதன்படி, 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த கலவரம் காரணமாக நிறுத்தப்பட்ட சித்திரை முழுநிலவு மாநாட்டை, மீண்டும் நடத்த முடிவெடுத்தார் ராமதாஸ். வரும் 11ல், மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில், மிகப்பிரமாண்டமாக மாநாட்டை நடத்தும் ஏற்பாடுகளை, ராமதாசும், அன்புமணியும் இணைந்து செய்து வருகின்றனர்.



இதற்கிடையில், தி.மு.க., தலைமையிலான வலுவான கூட்டணிக்கு எதிராக பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் கைகோர்த்துள்ளதுடன், த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து, பலம் வாய்ந்த அணியை கட்டமைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளன.



அப்படியொரு அணி அமையும்பட்சத்தில், அதை எதிர்கொள்ள பா.ம.க., ஆதரவு அவசியம் என, தி.மு.க., தரப்பு திடமாக நம்புகிறது. அதன்படி, பா.ம.க.,வை கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறது. தி.மு.க., எண்ணத்தை அறிந்த ராமதாஸ், அதற்கேப தன் காய் நகர்த்தலை துவங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இதுதொடர்பாக, பா.ம.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:



சரியான கூட்டணி அமைக்கப்படாததால், கடந்த இரு தேர்தல்களில் பெரும் தோல்வியை சந்தித்ததாக, ராமதாஸ் வருத்தத்தில் இருந்தார். தி.மு.க., கூட்டணியில் இணைந்து, அதை சரிசெய்யலாம் என்றால், விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் நெருடலாக இருந்தது. அதனால், எந்த முடிவும் எடுக்காமல் தள்ளிப்போட்டு வந்தார்.



இந்த நேரம் பார்த்து, தி.மு.க., கூட்டணியில் சிறு சலசலப்பு காணப்படுகிறது. அதாவது, வி.சி., கட்சியின் திட்டமும், நோக்கமும் தெரியவந்ததால், தி.மு.க., கொஞ்சம் யோசிக்க துவங்கி இருக்கிறது.

நம்புகின்றனர்



தலைமை தேர்தல் கமிஷனால், மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட பின், தமிழகத்தில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து விட்டதாக, திருமாவளவனும், அவரது கட்சியினரும் நம்புகின்றனர்.



சட்டசபை தேர்தலில், 30 முதல் 40 'சீட்' பெற நினைக்கின்றனர். அதற்கான நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கில் தான், விஜய் கட்சியோடு உறவாடினர். தி.மு.க., எரிச்சல் அடைந்ததை அறிந்ததும், தற்போது கூட்டணிக்கான கதவை மூடிவிட்டதாக, திருமாவளவன் சொல்கிறார். ஆனாலும், புறவாசல் வழியாக பேச்சு நடக்காதா என்ன? இருப்பினும், திருமாவளவனை வெளியே அனுப்பி, தேவையில்லாமல் எதிரணியினர் பலம் பெறுவதை, தி.மு.க., விரும்பவில்லை.



இந்நிலையில், விஜய் கட்சியை இழுத்து தங்கள் கூட்டணிக்கு பலம் சேர்க்க, அ.தி.மு.க., பார்க்கிறது. ஏனென்றால், தி.மு.க., அணியை வீழ்த்த, அக்கட்சிக்கு பா.ஜ., மட்டும் போதாது. இந்த சூழலில், பா.ம.க.,வின் பலமும், மதிப்பும் தி.மு.க.,வுக்கு பெரிதாக தென்படுகிறது.



எனவே, கூட்டணிக்குள் கொண்டு வர விரும்புகிறது. இரு கட்சிகளையும் சேர்ந்த மூத்த தலைவர்கள் இருவர், சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, திருமாவளவனையும் வைத்துக்கொண்டே, பா.ம.க.,வையும் சேர்ப்பது பற்றியே பேசியுள்ளனர்.




அ.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., அணி சேரும் நிலை வந்தாலும், ராமதாஸ், திருமாவை உள்ளடக்கிய தி.மு.க., அணியால், அதை எளிதில் வீழ்த்தி விடலாம் என, அந்த சந்திப்பில் தி.மு.க., தரப்பில் எடுத்துச் சொல்லப்பட்டு உள்ளது.

திருப்பம்



அடுத்தடுத்த கட்டங்களில், இந்த முயற்சிகள் முழு வடிவம் பெறும்போது, பா.ம.க.,வும் தி.மு.க., கூட்டணியில் இடம்பெறலாம். வரும் 11ல் திருவிடந்தையில் நடத்தப்படும் சித்திரை முழுநிலவு மாநாட்டில், அதற்கான திருப்பம் வரலாம்.



வி.சி.,க்களோடு பெரிய முரண் இல்லை என்பதை வெளிப்படுத்தவே, சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கு வருமாறு, திருமாவளவனுக்கு அழைப்பு விடப்பட்டது. அந்த அழைப்பின் பின்னணியில், தி.மு.க., இருப்பதையும் திருமாவளவன் அறிவார்.


இவ்வாறு அவர் கூறினார்.



- நமது நிருபர் -

Advertisement